Published : 15 Jun 2020 06:33 AM
Last Updated : 15 Jun 2020 06:33 AM

சென்னையில் முழு ஊரடங்கு வதந்தியால் சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள்

கரோனா தொற்று வேகமாக பரவுவதால் அதைக் கட்டுப்படுத்த சென்னையில் விரைவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என சமூக வலைதளங்களில் வதந்தி பரவுகிறது. அதனால் பொதுமக்கள் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.

சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள காஞ்சி, செங்கை, திருவள்ளூர் மாவட்டங்களில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.5-ம் கட்ட ஊரடங்கு விரைவில் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த கட்டமாக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது.

இதனால் தங்கள் வாழ்வாதாரம் மேலும் மோசமடையும் என்ற அச்சம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலிருந்து பலர் சொந்த ஊருக்கு செல்கின்றனர். மேலும், வேலைக்காக சென்னை வந்த பலர் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக வேலை இல்லாததால் வீட்டு வாடகை செலுத்த முடியாமல் வீடுகளை காலி செய்துவிட்டு தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.

செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் கடந்த 3 நாட்களாக ஏராளமான வாகனங்களில் கவலை தோய்ந்த முகத்துடன் வீட்டு உபயோக பொருட்களை ஏற்றிக்கொண்டு மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்லும் காட்சியை காண முடிகிறது. இவர்களைத் தடுக்க சுங்கச் சாவடியில் போலீஸார் கடும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இ-பாஸ் இல்லாதவர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.

இதுகுறித்து வெளியூர் செல்லும் சிலர் கூறும்போது, “இங்கு சில இடங்களில் மட்டுமே பணிகள் நடைபெறுகின்றன. 30 சதவீத பணியாளர்களைக் கொண்டு தொழிற்சாலைகள் இயங்குகின்றன. அதனால், எங்களுக்கு வேலை இல்லை. வீட்டுவாடகை கூட கொடுக்க முடியாததால்சொந்த ஊருக்கே சென்று பிழைத்துக்கொள்ளலாம் என முடிவு செய்து அங்கு செல்கிறோம்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x