Published : 15 Jun 2020 06:32 AM
Last Updated : 15 Jun 2020 06:32 AM

சென்னையில் கரோனா தடுப்புப் பணிக்காக வார்டுகள் அளவில் 200 நுண் குழுக்கள் - மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தகவல்

சென்னையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த வார்டுகள் அளவில் உதவி பொறியாளர்கள் தலைமையில் 200 நுண் குழுக்கள் அமைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த, மாநகராட்சி உதவி பொறியாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் பங்கேற்று பேசியதாவது:

சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் மொத்தம் 200 வார்டுகள் உள்ளன. அவற்றில்பணியாற்றும் உதவி பொறியாளர்கள் அல்லது இளநிலை பொறியாளர்களை குழு தலைவராக நியமித்து நுண் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இக்குழுவின் தலைவராக உதவி பொறியாளர் நியமிக்கப்படுவார். குழுவில் மாநகராட்சி சுகாதார பணியாளர், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் இதர அலுவலர்கள் இணைந்து பணியாற்ற உள்ளனர்.

இக்குழு நோய்த் தொற்று பாதித்த நபரை மருத்துவமனைக்கு அனுப்ப உதவி செய்தல், அவர்களது தொடர்புகளை கண்டறிந்து கண்காணித்து உடனுக்குடன் தகவல் தெரிவித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளும்.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளித்து மக்களுக்கு ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்குதல், கபசுரக்குடிநீர் வழங்குதல் மறு பயன்பாட்டுடன் கூடிய துணியாலான முகக்கவசம் வழங்குதல், வீடு வீடாகச் சென்று நோய் அறிகுறி உள்ளவர்களைக் கண்டறிதல், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், கர்ப்பிணிகள் உயர் ரத்த அழுத்த நோயாளிகள் மற்றும் நீரிழிவு நோயாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை வழங்குதல், கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய பணிகளை தன்னார்வலர்களுடன் இணைந்து இக்குழு செயல்படுத்த வேண்டும்.

குழாய் மூலம் குடிநீர் பெற வசதி இல்லாத குடிசைப் பகுதியில் வாழும் மக்கள் அனைவரும் குடிநீரை பிடிப்பதற்காக பெருமளவில் கூடுகிறார்கள். இதன் மூலம் நோய் பரவும் அபாயத்தை தவிர்க்க, சென்னை குடிநீர் வாரியத்துடன் இணைந்து, குடிநீர் தொட்டிகளை அமைக்க இக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர்கள் பி.குமாரவேல் பாண்டியன், ஜெ.மேகநாத ரெட்டி, தலைமை பொறியாளர் எல்.நந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x