Published : 15 Jun 2020 06:30 AM
Last Updated : 15 Jun 2020 06:30 AM

இன்று முதியோர் கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தினம்- முதியோரை மதிக்கும் சமுதாயத்தை உருவாக்குவோம்

இந்தியாவின் 23 நகரங்களில் 5,014 முதியோரிடம் ‘ஹெல்ஃபேஜ் இந்தியா’ தொண்டு நிறுவனம் கடந்த 2018-ல் ஒரு கணக்கெடுப்பு நடத்தியது. அதில், இளைய சமுதாயத்தினரால் 25 சதவீத முதியவர்கள் அவமதிக்கப்படுகிறார்கள் என்பது தெரியவந்தது. இதைவிட இன்னும் அதிர்ச்சியூட்டும் செய்தி, 52 சதவீத முதியவர்கள் தங்கள் மகன்களாலும் 34 சதவீத முதியவர்கள் தங்கள் மருமகள்களாலும் புறக்கணிக்கப்படுகின்றனர். இவ்வாறு அவமதிக்கப்பட்டவர்களில் 82 சதவீதம் பேர் யாரிடமும் இதுபற்றி தெரிவிக்கவில்லை.

கிராமத்தில் பெரியவர்கள் இன்னமும் மதிக்கப்படுகின்றனர். நகர்ப்புறத்தில்தான் சில குடும்பங்களில் முதியவர்கள் அவமதிக்
கப்படுகின்றனர்.

எந்தெந்த வகைகளில்..

மனம், சொல், செயல் என எந்த வகையிலும் அவமதிப்பு நிகழலாம். வெளியில் கூட்டுக்குடும்பம் என்று சொல்லிக்
கொண்டு, வீட்டில் பெரியவர்களிடம் பேசாமல் இருப்பது மனதளவில் காயப்படுத்துதல் ஆகும்.

வீட்டில் இருக்கும் முதியவர்களை அடிக்கடி திட்டுவது, சண்டை போடுவது வாய்மொழி சார்ந்த அவமதிப்பு. காசோலையில் பொய் கையொப்பமிட்டு பணம் எடுப்பது, சொத்துகளை எழுதிவைக்கச் சொல்லி மிரட்டுவது பொருள் சார்ந்தது. மறதிநோயால் பாதிக்கப்பட்ட முதியோரை அடித்தல், துன்புறுத்தல் உடல்சார்ந்த அவமதிப்பாகும்.

முதியோர் கொடுமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஐ.நா. சபை சார்பில் ஆண்டுதோறும் ஜூன் 15-ம் தேதி (இன்று) ‘முதியோர் கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு’ நாளாக கடந்த 2006 முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அறக்கட்டளையின் பங்கு

டாக்டர் வ.செ.நடராசன் முதியோர் நல அறக்கட்டளையின் முயற்சியைத் தொடர்ந்து, அரசுஆணை பெறப்பட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகளிலும் கடந்த 3 ஆண்டுகளாக ஜூன் 15-ம் தேதி‘முதியோர் கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு’ நாளாக கடைபிடிக்கப்பட்டு, பல லட்சம் மாணவ, மாணவிகள் உறுதிமொழியும் எடுத்து வந்துள்ளனர்.

எனவே, ஆண்டுதோறும் இந்த தினத்தை பள்ளி, கல்லூரிகளில் தவறாமல் கடைபிடித்து, அனைவரும் முதியோர் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்க வேண்டும். பள்ளி நூலில் ‘முதியோரை மதித்தல்’ பற்றிய கட்டுரைகள் இடம்பெற வேண்டும். மேற்கண்ட வழிமுறைகளை கடைபிடித்தால் வருங்கால சமுதாயம் நிச்சயம் முதியோரை மதிக்கும் சமுதாயமாக உருவாகும்!

உதவிக்கு அழைக்கலாம்

சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் முதியவர்களுக்கு உதவி தேவைப்பட்டால் 1253 என்ற எண்ணையும், தமிழகத்தின்
மற்ற பகுதியில் உள்ளவர்கள் 18001801253 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.

முதியோரை பாதுகாப்போம்!

‘‘முதியோருக்கு எதிராக வாய்மொழியாகவோ, வன்முறை மூலமாகவோ, பொருளாதார ரீதியாகவோ எந்த உருவில் கொடுமை இழைக்கப்பட்டாலும், அதை களைய நடவடிக்கை எடுப்பேன். முதியவர்கள் கொடுமைப்படுத்தப்படுவதை முளையிலேயே கண்டுபிடித்து தலையிட்டு தடுக்கவும், அறவே நீக்கவும், என் சொந்த முயற்சியாலும், தேவைப்பட்டால் அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களின் துணையோடும் பாடுபடுவேன். அவர்களது உடல் வளம், மன வளம், அன்பு, பாதுகாப்பு, மதிப்பு, மரியாதை, அங்கீகாரத்துக்கு இடையூறு ஏற்பட்டால் அவற்றை தடுத்து பாதுகாப்பேன் என்று உறுதி அளிக்கிறேன்’’ - இதுவே முதியோர் கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு நாள் உறுதிமொழியாகும்.

கட்டுரையாளர்:

முதியோர் நல மருத்துவர், இந்திய முதியோர் நல மருத்துவக் கழக புரவலர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x