புதுக்கோட்டையில் தனிமனித இடைவெளியின்றி அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்ற நிகழ்ச்சிகள்; பொதுமக்கள் அதிருப்தி
புதுக்கோட்டையில் நடைபெற்ற அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்ட விழாக்களில் தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்படாதது பொதுமக்களை அதிருப்தியில் ஆழ்த்தியது.
கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பொது வெளியில் நடமாடும்போது தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் விதித்துள்ளன.
இதைப் பின்பற்றாதோர் மீது காவல் துறையினர் மற்றும் ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர்.
இந்நிலையில், புதுக்கோட்டை செல்லப்பா நகரில் அம்ருத் திட்டத்தில் ரூ.80 லட்சத்தில் கட்டப்பட்ட பூங்காவை ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தலைமையில் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இன்று (ஜூன் 14) திறந்து வைத்தார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், நகராட்சி ஆணையர் ஜெ.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கோயில் திருப்பணி ஆய்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.
இவ்விழாவில், படம் எடுப்பதற்காக ஒதுக்கப்பட்ட சில நிமிடங்களைத் தவிர ஏனைய நேரங்களில் தனிமனித இடைவெளி பின்பற்றப்படாமல் ஒருவரையொருவர் இடித்துக்கொள்ளும் வகையில் கடும் நெருக்கடியோடு பங்கேற்றனர்.
இதேபோன்று, புதுக்கோட்டையில் அமைச்சர், அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற்ற பிடாரி அம்மன் கோயில் திருப்பணி ஆய்வு நிகழ்ச்சியிலும் தனிமனித இடைவெளி பின்பற்றப்படவில்லை.
இதுமட்டுமின்றி, புதுக்கோட்டையில் திருவப்பூர் ரயில்வே கேட், கோவில்பட்டி, திருக்கோகர்ணம், பால்பண்ணை, நரிமேடு, காமராஜபுரம், வஉசி நகர், போஸ் நகர், அய்யனார்புரம், திருவள்ளுவர் நகர், பிச்சத்தான்பட்டி உள்ளிட்ட இடங்களில் கரோனா நிவாரண பொருட்களை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வழங்கினார்.
அதிமுக சார்பில் நடைபெற்ற நிவாரண பொருட்கள் வழங்கும் விழா.
இந்நிகழ்ச்சியில் அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இங்கும் தனிமனித இடைவெளி கொஞ்சமும் பின்பற்றப்படவில்லை. இது அங்கிருந்தோரை அதிருப்தி அடையச் செய்தது.
எந்த இடத்திலும் தனிமனித இடைவெளி பின்பற்றப்படாதது குறித்து ஒரு கட்டத்தில் அமைச்சரே தர்மசங்கடத்துக்கு ஆளாகி, தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியதாகவும் அலுவலர்கள் தரப்பில் கூறப்பட்டது.
