செல்போன் பேசியபடியே பள்ளத்தில் விழுந்தார்; இரும்புக்கம்பி குத்தி உயிருக்குப் போராடிய இளைஞரை காப்பாற்றிய தஞ்சாவூர் அரசு மருத்துவர்கள்
செல்போன் பேசியபடியே நடந்து சென்ற இளைஞர் திடீரென பள்ளத்தில் விழுந்ததால் இரும்புக்கம்பி குத்தியது.
உயிருக்குப் போராடிய இளைஞரை தஞ்சாவூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் காப்பாற்றினர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பின்னையூர் கணக்கன் தெருவை சேர்ந்தவர் ரெங்கசாமி. இவரது மகன் அய்யப்பன் (26). இவர் நேற்று (ஜூன் 13) இரவு பின்னையூர் அரசு பள்ளி கட்டிடத்தின் அருகே உள்ள ஆற்றங்கரையில் செல்போனில் பேசியபடி நின்றுகொண்டிருந்தார்.
புதிய கட்டிடம் ஒன்றை அரசு பள்ளிக்கு கட்ட குழிகள் தோண்டப்பட்டு தூண்கள் போடப்பட்டிருந்தது. சுமார் 5 அடி பள்ளம் உள்ள இந்த குழியில் தூண்கள் போடப்பட்டு கம்பிகள் நீட்டிக்கொண்டு இருந்தது.
இந்நிலையில், செல்போனில் பேசிக்கொண்டிருந்த அய்யப்பன் திடீரென எதிர்பாராதவிதமாக அந்த குழியில் விழுந்தார்.
இதனால் அய்யப்பனின் விலாபகுதியில் ஒருபுறம் கம்பி குத்தி மறுபுறம் உடலில் வந்தது. இதனால் அய்யப்பன் படுகாயமடைந்து அலறி துடித்தார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அய்யப்பனின் உடலை மீட்க இரும்பு கம்பியை வெட்டி எடுத்து, 108 ஆம்புலன்ஸில் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர்.
தஞ்சாவூர் மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்குப் போராடிய நிலையில் அய்யப்பனுக்கு மருத்துவர்கள் வெகு நேரம் போராடி அறுவை சிகிச்சை மூலம் அந்த கம்பியை அகற்றினர்.
