

திருச்சி அருகே வனப்பகுதியில் வேட்டையில் ஈடுபட்டு, அதை முகநூலில் பதிவிட்டு வந்த இளைஞரையும், அவருக்கு உடந்தையாக இருந்த அரசுப் பள்ளி தலைமையாசிரியையான அவரது தாயாரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் பாடலூரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் பிரபு (எ) கவிக்குமார் (30). எம்.எஸ்.சி எலக்டரானிக் மீடியா மற்றும் எம்.பி.ஏ படித்துள்ள இவர், அதே பகுதியில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். வேட்டையாடுவதில் ஆர்வமுள்ள கவிக்குமார், கடந்த சில வருடங்களாக தனது நண்பர்களுடன் சேர்ந்து திருச்சி வன எல்லைக்குட்பட்ட நெடுங்கூர் காப்புக்காடு பகுதியில் வேட்டையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
போலீஸாருடன் இணைந்து சோதனை
இதுகுறித்து திருச்சி மாவட்ட வன அலுவலர் சுஜாதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் வன சரகர் குணசேகரன் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் (ஜூன் 12) பாடலூருக்குச் சென்று கவிக்குமாரைப் பிடித்து விசாரணை நடத்தினர். அவரது செல்போன் மற்றும் கணினியை ஆய்வு செய்ததில், அவர் ஏராளமான வன உயிரினங்களை வேட்டையாடியது உறுதி செய்யப்பட்டது. அதற்கான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இருந்தன. மேலும் 'மெசஞ்சர்' வாயிலாக 'பாகிஸ்தான் ஹன்டிங் கிளப்'புடன் தொடர்பில் இருந்ததாகவும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து பாடலூர் போலீஸாருடன் இணைந்து கவிக்குமார் வீட்டுக்குச் சென்று வனத்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு, வேட்டைக்கு பயன்படுத்தும் 'ஹெட்லைட்' உள்ளிட்ட பல்வேறு சாதனங்கள் கைப்பற்றப்பட்டன.
அரசுப் பள்ளி தலைமையாசிரியை
இதற்கிடையே, கவிக்குமார் வேட்டையில் ஈடுபட அவரது தாயாரும், நெய்குளம் அரசு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியையுமான லட்சுமி (53) பல்வேறு வகைகளில் உதவியாக இருந்தது தெரியவந்தது. எனவே அவரையும் பிடித்து விசாரித்தனர்.
பின்னர் வன உயிரின பாதுகாப்புச் சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து கவிக்குமார், லட்சுமி ஆகியோரை வனத்துறையினர் நேற்று (ஜூன் 13) கைது செய்தனர். இவர்கள் அளித்த தகவலின்பேரில் அதே பகுதியிலுள்ள கொளத்தூரைச் சேர்ந்த மகாலிங்கம் (58) என்பவரையும் கைது செய்து, அவரிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி, 'ஹெட்லைட்' போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.
மகாலிங்கம்
சமூக வலைதளங்களில் கண்காணிப்பு
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "மான், முயல், நரி, உடும்பு உள்ளிட்ட வன உயிரினங்களை வேட்டையாடுவது சட்டப்படி குற்றம் என தெரிந்திருந்தும், பலர் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து வேட்டையாடி வருகின்றனர். அவர்களில் சிலர் வேட்டைக்குச் செல்வதையோ அல்லது வேட்டையாடிய உயிரினங்களுடனோ அல்லது நண்பர்களுடன் கூட்டாகச் சேர்ந்து அவற்றை சமைத்து சாப்பிடுவதையோ புகைப்படங்கள் எடுத்து, தற்பெருமைக்காக சமூக வலைதளங்களில் பதிவிடுவது அதிகரித்து வருகிறது.
எனவே, திருச்சி மாவட்டத்தில் வேட்டையாடுதலைத் தடுக்க வனப்பகுதிகளில் ரோந்து பணிகளில் ஈடுபடுவது மட்டுமின்றி வாட்ஸ் அப், முகநூல், யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வரக்கூடிய வேட்டை தொடர்பான பதிவுகளையும் கண்காணித்து வருகிறோம்.
பாகிஸ்தானியர்களுடன் பேசியது என்ன?
பாடலூரைச் சேர்ந்த கவிக்குமார் தனது முகநூலில் பதிவிட்டுள்ள படங்கள் மற்றும் விவரங்கள் அடிப்படையில் அவரைப் பிடித்து விசாரித்தபோது, வனப்பகுதியில் வேட்டையாடுவது மட்டுமின்றி பாகிஸ்தானியர்கள் சிலருடன் 'மெசஞ்சர்' மூலம் தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டது. வேட்டை தொடர்பான தகவல்களை மட்டுமே அவர்களுடன் பகிர்ந்து கொண்டதாக கவிக்குமார் கூறியுள்ளார்.
ஆனால், இதற்கு பின் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பதைக் கண்டறிய காவல்துறையினர் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர். வேட்டைக்குச் செல்வோர் பலர், இவருடன் சமூக ஊடங்கள் வாயிலாக தொடர்பில் உள்ளதால், அவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து வருகிறோம்.
மேலும், கவிக்குமார் தனது முகநூலில் ஒரு துப்பாக்கியின் படத்தை பதிவிட்டுள்ளார். ஆனால், அதுகுறித்து கேட்டபோது உரிய பதில் கிடைக்கவில்லை. அதை கண்டறிந்து பறிமுதல் செய்யும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளோம்" என்றனர்.
டிக்டாக்கில் பதிவிட்டவரும் கைது
இதுதவிர, ஜீயபுரம் அருகேயுள்ள மேக்குடி கிராமத்தைச் சேர்ந்த குணசேகர் மகன் வரதராஜ் (24) என்பவர் உடும்பைப் பிடித்து சமைத்து சாப்பிடுவதை செல்போனில் வீடியோ எடுத்து டிக்டாக்கில் பதிவிட்டிருந்தார். இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் அவரையும் நேற்று கைது செய்தனர்.
வரதராஜ்