Last Updated : 14 Jun, 2020 01:23 PM

 

Published : 14 Jun 2020 01:23 PM
Last Updated : 14 Jun 2020 01:23 PM

நெஞ்சில் பாய்ந்த கத்தியுடன் 30 மணி நேரம் இருந்த பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய கோவை அரசு மருத்துவர்கள்

மல்லிகா

கோவை

நெஞ்சில் பாய்ந்த கத்தியுடன் சுமார் 30 மணி நேரம் இருந்த பெண்ணின் உயிரை கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்தவர் மல்லிகா (40). இவரை கடந்த மே 25-ம் தேதி ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். சேலம் அரசு மருத்துவமனையில் மே 26-ம் தேதி அனுமதிக்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக அன்றைய தினமே நெஞ்சில் பாய்ந்த கத்தியுடன் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதய அறுவை சிகிச்சைத்துறையின் கீழ் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அவசர நெஞ்சு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து இதய அறுவை சிகிச்சைத்துறை தலைவர் பேராசிரியர் இ.சீனிவாசன், இதய அறுவை சிகிச்சை உதவிப் பேராசிரியர்கள் அரவிந்த், மின்னத்துல்லா, மயக்கவியல் துறைத் தலைவர் பி.ஜெய்சங்கர நாராயணன், உதவிப் பேராசிரியர் மணிமொழிச்செல்வன், கோபிநாத், செவிலியர்கள் விஜயலட்சுமி, கல்பனா ஆகியோர் கொண்ட குழு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து, சுமார் 30 மணி நேரம் நெஞ்சு பகுதியில் குத்தியிருந்த கத்தியை பாதுகாப்பாக அகற்றினர். அவர் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பியுள்ளார்.

எக்ஸ்ரே பரிசோதனையில் தெரியும் நெஞ்சு பகுதியில் பாய்ந்த கத்தி

இதுதொடர்பாக மருத்துவமனையின் டீன் பி.காளிதாஸ் கூறும்போது, "இது ஒரு அபூர்வமான நிகழ்வு. பெண்ணின் நெஞ்சுப் பகுதியில் 6 'இன்ச்' அளவுக்கு கத்தி உள் இறங்கி இருந்தது. ஒரு 'இன்ச்' கைப்பிடி மட்டுமே வெளியே தெரிந்தது. பரிசோதனை செய்து பார்த்ததில் கத்தி இறங்கிய பாதையில் முக்கிய உறுப்புகள் ஏதும் பாதிக்கப்படவில்லை. நுரையீரலில் மட்டும் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. மற்ற உறுப்புகள் ஏதும் பாதிக்காத வகையில் அறுவை சிகிச்சை மூலம் கத்தி பாதுகாப்பாக அகற்றப்பட்டு, நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பும் சரிசெய்யப்பட்டது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x