

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகளில் 81 நடமாடும் விரைவு மருத்துவக் குழுக்கள் ஈடுபடுத்தப்படுகின்றன.
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனாலும், சென்னைமாநகராட்சியில் சில மண்டலங்களிலும் செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சென்னையில் பொது சுகாதாரத் துறையின் இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், சுகாதார அலுவலர்கள், மருத்துவ அலுவலர்கள், இந்திய மருத்துவ அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 726 பேர் ஏற்கெனவே தடுப்புநடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இவைத் தவிர 108 ஆம்புலன்ஸ்கள் 80, பொது சுகாதாரத் துறையின் 33 நடமாடும் மருத்துவ வாகனங்கள் உள்ளிட்ட 173 வானகங்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மேலும் வலுவூட்டும் வகையில்,சென்னையில் 61 நடமாடும் விரைவு மருத்துவக் குழுக்கள்,செங்கல்பட்டு மாவட்டத்தில் 10 குழுக்கள், திருவள்ளுர் மாவட்டத்தில் 5 குழுக்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 குழுக்கள் என மொத்தம் 81 நடமாடும் விரைவுமருத்துவ குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த குழுக்களின் செயல்பாட்டை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்றது. இதைசுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார். இந்தக் குழுக்கள் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகியமாவட்டங்களில் கரோனா தொற்று கண்டறியும் பணிகள்மற்றும் தனிமைப்படுத்தப்பட்டநபர்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
இந்நிகழ்ச்சியில் சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவ பணிகள் இயக்குநர் குருநாதன், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.