

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் சமரத்தை விவசாயிகள் ஏற்காததால் கண்மாய் குடிமராமத்து பணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
திருப்பத்தூர் அருகே குண்டேந்தல்பட்டியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிராமண கண்மாய் 300 ஏக்கர் பரப்பு கொண்டது.
இக்கண்மாய் மூலம் 1,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இக்கண்மாய் குடிமராமத்து பணிக்காக தமிழக அரசு ரூ.80 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது.
இதில் கண்மாய் தூர்வாருதல், 2 கழுங்கு சரி செய்தல், 2 மடைகளை சரி செய்தல், கரை சீரமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
ஆனால் விவசாயிகள் இரு குழுக்களாக பிரிந்து, தங்களுக்கு தான் குடிமராமத்து பணியை ஒதுக்க வேண்டுமென, வலியுறுத்தி வந்தனர்.
இதனால் குடிமராமத்து பணியை மேற்கொள்வதில் சிக்கல் இருந்து வந்தது. இதையடுத்து இன்று மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் குண்டேந்தல்பட்டியில் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் விவசாயிகள் சமரசம் ஆகவில்லை. இதையடுத்து ‘இரு குழுக்களாக செயல்பட்டால் குடிமராமத்து பணி செய்ய இயலாது. இருத்தரப்பினரும் கலந்து ஆலோசித்து பிரச்சினையின்றி குடிமராமத்து பணியை மேற்கொள்ள வேண்டும்,’ என தெரிவித்துவிட்டு ஆட்சியர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
விவசாயிகளிடம் சமரசம் ஏற்படாததால் குடிமராமத்து பணி மேற்கொள்வதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.