

கூடுதல் விலைக்கு கிடைக்கும் என்ற ஆசையில் திருவண்ணாமலையில் இருந்து தஞ்சாவூருக்கு நெல் மூடைகளைக் கொண்ட வந்த விவசாயி மீது வழக்கு பதிவு செய்தது வேதனையானது என உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலையைச் சேர்ந்த ரெத்தினம் செட்டி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
திருவண்ணாமலையில் எனது விளை நிலத்தில் அறுவடை செய்த 256 மூடை நெல்லை லாரியில் தஞ்சாவூருக்கு விற்பத்காக கொண்டுச் சென்றேன். அப்போது சேதுபாவாசத்திரம் போலீஸார் லாரியை தடுத்து நிறுத்தி என் மீது வழக்கு பதிவு செய்தனர். லாரி, அதிலிருந்த நெல் மூடைகளையும் பறிமுதல் செய்தனர்.
கூடுதல் விலைக்கு விற்கும் நோக்கத்தில் தஞ்சைக்கு நெல்லை கொண்டுச் சென்றேன். வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. எனவே என் மீதான வழக்கை ரத்து செய்து லாரி, நெல் மூடைகளை விடுவிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர் விவசாயி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் மீது வழக்கு பதிவு செய்தது வேதனையானது. விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும். விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது. மனுதாரர் மக்களுக்கு வழங்கப்படும் அரிசிக்கான நெல்லை கடத்தவில்லை.
எனவே அவர் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும். லாரி மற்றும் நெல் மூடைகளை தாமதம் இல்லாமல் மனுதாரரிடம் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.