

சென்னையில் இருந்து இருசக்கர வாகனம் மூலமாக இ-பாஸ் பெறாமல் சேலம் வந்த தம்பதி உள்பட மூவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் கரோனா தொற்று அதிதீவிரமாகப் பரவி வரும் நிலையில், சென்னையில் நாளுக்கு நாள் தொற்றால் பாதிப்பவர்களின் எண்ணிக்கையும் கூடி வருகிறது. இதனால், சென்னையில் இருந்து சொந்த மாவட்டங்களுக்குத் திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சேலம் செவ்வாய்ப்பேட்டையைச் சேர்ந்த தம்பதி, சென்னையில் இருந்து இ-பாஸ் எதுவுமின்றி பல மாவட்டங்களை இருசக்கர வாகனம் மூலம் கடந்து வந்துள்ளனர். சென்னையில் இருந்து சேலம் வந்த தம்பதி குறித்து, அருகில் வசிப்பவர்கள் மாநகராட்சி நிர்வாகத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.
மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் விரைந்து வந்து, தம்பதியர் சென்னையில் இருந்து வந்ததை உறுதி செய்து, செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதேபோல, சேலம் டவுன் பேச்சியம்மன் நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சென்னையில் இருந்து இ-பாஸ் பெறாமல் இருசக்கர வாகனம் மூலமாக சேலம் வந்தடைந்தார். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்குத் தகவல் கிடைக்கப்பெற்று, கிச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சேலம் செவ்வாய்ப்பேட்டையைச் சேர்ந்த தம்பதி மற்றும் இளைஞர் ஆகிய மூவர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கருப்பூரில் உள்ள தனிமைப்படுத்தும் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சேலம் மாநகராட்சி அதிகாரிகள் பிற மாவட்டங்களில் இருந்து இ-பாஸ் இல்லாமல் சேலம் மாநகருக்கு யாரேனும் வருகின்றனரா என்பது குறித்து தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.