குடியிருப்புகளுக்கு நடுவே தனிமைப்படுத்துவோர் முகாம்; கிராம மக்கள் சாலை மறியல்

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே குடியிருப்புப் பகுதியில் தனிமைப்படுத்துவோர் முகாம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மகாராஷ்டிராவில் பணியாற்றிவிட்டு, தற்போது சொந்த ஊர் திரும்பிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, கரோனா பரிசோதனை மேற்கொள்வதற்காக தியாகதுருகம் பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்ட முகாம் அமைப்பதாக தகவல் வந்தது.

இதனையடுத்து, அங்கு முகாம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து தியாகதுருகம், காந்திநகர், பெரியாம்பட்டு, சடையான்குளம் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தியாகதுருகம் புறவழிச்சாலையில் இன்று (ஜூன் 13) சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் தியாகதுருகம் புறவழிச்சாலையில் சுமார் 20 நிமிடத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் ரகோத்தமன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் தனிமைப்படுத்தப்பட்ட முகாம் இங்கு அமைக்கப்பட்டால் மீண்டும் போராட்டம் நடைபெறும் எனக் கூறி, போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in