புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வேலையை தமிழக இளைஞர்களுக்கு வழங்கப் பயிற்சி: அமைச்சர் எம்.சி.சம்பத் தகவல்

சிமெண்ட் ஆலையைப் பார்வையிடுகிறார் தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்.
சிமெண்ட் ஆலையைப் பார்வையிடுகிறார் தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்.
Updated on
1 min read

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வேலையை தமிழக இளைஞர்களுக்கு வழங்கப் பயிற்சியளிக்கப்படும் என தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.

அரியலூரில் உள்ள அரசு சிமெண்ட் ஆலையில் புதிதாகக் கட்டப்பட்டு இயங்கி வரும் சிமெண்ட் ஆலையை (பிளான்ட்) தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் இன்று (ஜூன் 13) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, உற்பத்தித் திறன், விற்பனை, கொள்முதல் செய்யும் நிறுவனங்கள், பொதுமக்களுக்கு வழங்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள், சிமெண்ட் ஆலைக்கு நிலம் வழங்கியவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல் ஆகியவற்றுக்கு மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, சிமெண்ட் ஆலை உற்பத்தியை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் எம்.சி.சம்பத் கூறுகையில், "அம்மா சிமெண்ட் மூலம் பொதுமக்களுக்கு ரூ.190 எனக் குறைந்த விலையில் மாதம் 1 லட்சம் சிமெண்ட் மூட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் தனியார் சிமெண்ட் ஆலைகளின் பங்களிப்பு குறைந்துள்ளதை சரிப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர, சிறு, குறு தொழில் நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய அரசு ரூ.3 லட்சம் கோடி நிதி கடன் அறிவிப்பு செய்துள்ளது. ரூ.100 கோடி வரை தொழில் செய்யும் சிறு, குறு தொழில் முனைவோர்கள் இந்த நிதியை வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் பெற்றுக்கொண்டு தங்களது ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும், தங்களது தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருட்களை வாங்கிக்கொள்ளவும் மாநில அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்குப் பதிலாக அந்த வேலைவாய்ப்புகளில், தமிழக இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்து அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க தமிழக முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இதற்கான பயிற்சிகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

ஆய்வின்போது, அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன், தமிழ்நாடு சிமெண்ட் நிறுவன மேலாண்மை இயக்குநர் கே.வி.முரளிதரன், மாவட்ட ஆட்சியர் த.ரத்னா, மாவட்ட எஸ்.பி. ஆர்.ஸ்ரீனிவாசன் உட்பட பலர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in