

இ-பாஸ் வழங்குவதில் நீடிக்கும் கட்டுப்பாடுகளால் சென்னையில் இருந்து அனுமதியில்லாமல் தென் மாவட்டங்களுக்கு வருவோரால் ‘கரோனா’ மீண்டும் வேகம் எடுத்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதனால், இ-பாஸ் வழங்கும் கட்டுப்பாடுகளை தளர்த்தி விருப்பப்படும் மக்கள் சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்குச் செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
திருமணம், அவசர மருத்துவம், நெருங்கிய உறவினர் மரணம், வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் சிக்கி தவிப்பது உள்ளிட்ட காரணங்ளுக்காக சாலை, ரயில் மற்றும் விமானம் மூலம் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு நுழைவதற்கும், தமிழகத்திற்குள் வெவ்வெறு மாவட்டங்களுக்கு செல்வதற்கும் இ-பாஸ் வழங்கப்படுகிறது.
இதில், தனி நபராகவும், குழுவாகவும் சாலை மார்க்கமாக செல்வதற்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பிக்கின்றனர். இதில், சென்னையில் ‘கரோனா’ சமூகப் பரவலாக உருவெடுத்தநிலையில் அங்கிருந்துதான் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு செல்வோர் அதிகரித்துள்ளனர்.
இ-பாஸ் கொடுக்கப்பட்டால் செல்வோரின் செல்போன் நம்பர், கார் நம்பர், வீட்டுமுகவரி பதிவு செய்யப்படுதால் அவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றால் அவர்களை சுகாதாரத்துறையினர் கண்டறிந்து பரிசோதனை செய்யப்படுகின்றனர். இதில், தொற்று இருந்தால் அவர்களுக்கு சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்கின்றனர்.
தொற்று கண்டறியப்படாதப்பட்சத்தில் 14 நாட்கள் அவர்களை வீட்டில் இருந்தப்படியே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.
ஆனால், கடந்த சில நாளாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து முறையாக செல்வதற்கு விண்ணப்பித்தாலும் அவர்களுக்கு ஏதாவது ஒரு காரணம் சொல்லி இ-பாஸ் மறுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. பெரும்பாலும் இந்த மாவட்டங்களில் இருந்தே தென் மாவட்டங்களுக்கே அதிகமானோர் இ-பாஸ் கேட்டு விண்ணப்பிக்கின்றனர்.
பல முறை முயற்சி செய்தும் இ-பாஸ் கிடைக்காததால் இ-பாஸ் இல்லாமலே சொந்த மாவட்டங்களுக்கு மக்கள் செல்வதாக கூறப்படுகிறது. அப்படி சொந்த மாவட்டங்களுக்கு செல்வோரை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதனால், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு யாரும் விருப்பப்பட்டால் அவர்கள் செல்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்காமல் அவற்றை தளர்த்தி எளிதாக அனுமதி வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து மதுரை மாவட்ட உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘இ-பாஸ் வழங்குவதில் அரசு அறிவுறுத்தும் வழக்கமான நடைமுறையே பின்பற்றப்படுகிறது. ஆனால், விண்ணப்பத்தில் குறிப்பிடப்படும் காரணங்களுக்காக செல்வோர் அதற்கான சான்றுகளை முறையாக இணைப்பதில்லை. முறையாக இணைத்தால் கண்டிப்பாக அவர்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
இ-பாஸ் இல்லாமல் வழங்குவோரை கண்டுபிடிக்க, வெளியூர்களில் இருந்து யாராவது புதியவர் தங்கள் பகுதிக்கு வந்தால் அவர்களை பற்றி அறிய சுகாதாரத்துறை கண்காணிக்கின்றனர், ’’ என்றார்.
தற்போது இ-பாஸ் இல்லாமல் மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் அதிகமானோர் நுழைந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள், இந்த மாவட்டங்களில் ‘கரோனா’ மீண்டும் வேகம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.