கரோனா தடுப்புப் பணிக்காக சென்னைக்குச் சென்ற தஞ்சாவூர் மாநகராட்சி சுகாதார ஆய்வாளருக்கு கரோனா

தஞ்சை மாநகராட்சி அலுவலகம்: கோப்புப்படம்
தஞ்சை மாநகராட்சி அலுவலகம்: கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னைக்கு கரோனா தடுப்புப் பணிக்காகச் சென்ற தஞ்சாவூர் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், மற்ற பணியாளர்கள் சென்னையில் பணி என்றால் தயக்கம் காட்டி வருகிறார்கள்.

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் பணியில் தமிழகத்தில் பிற மாவட்ட மாநகராட்சி, நகராட்சிப் பணியாளர்களை சென்னையில் பணியாற்ற நகராட்சி நிர்வாக ஆணையர் அழைப்பு விடுத்துள்ளார்.

அதன்படி ஒவ்வொரு மாநகராட்சி, நகராட்சியிலிருந்தும் பணியாளர்கள் சென்னைக்குச் சென்று பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி தஞ்சாவூரிலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பாக மாநகராட்சி நகர்நல அலுவலர் நமச்சிவாயம் தலைமையில் 5 சுகாதார ஆய்வாளர்கள் சென்றனர்.

இதில் தஞ்சாவூர் கீழவாசல் பகுதியைச் சேர்ந்த சுகாதார ஆய்வாளர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, அவர் தஞ்சாவூருக்கு இரு தினங்களுக்கு முன் திரும்பி வந்தார். பின்னர் அவர் தன்னை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, அவருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டது உறுதியானது. இதையடுத்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து மாநகராட்சிப் பணியாளர்கள் சென்னைக்குப் பணிக்குச் செல்லத் தயக்கம் காட்டி வருகின்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் சிலர் கூறுகையில், "தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 140 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 100 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தஞ்சாவூர் மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, தற்போது அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு, மாநகராட்சி நகர்நல அலுவலர் நமச்சிவாயம் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் 5 பேர் கரோனா தடுப்புப் பணிக்காக சென்னை சென்றிருந்தனர். அதில் ஒரு பணியாளருக்குக் கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், சென்னையில் இருந்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது அவர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனால், சக பணியாளர்கள் மிகவும் கலக்கத்தில் உள்ளனர். அத்துடன் சென்னைக்கு கரோனா தடுப்புப் பணிக்காக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அனுப்பப் பட்டியல் தயார் செய்யப்பட்ட நிலையில், பலரும் தயக்கம் காட்டியதால், அப்பணியை மாநகராட்சி நிர்வாகம் முடக்கி வைத்துள்ளது" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in