தமிழகத்தில் அதிகரிக்கும் கரோனா தொற்று: ஜூன் 15-ல் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை
தமிழகத்தில் அதிகரித்து வரும் கரோனா தொற்று, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதிகமாகும் தொற்று, அடுத்தகட்ட நடவடிக்கை ஆகியவை குறித்து ஆலோசிக்க தமிழக அரசு அமைத்துள்ள 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி திங்கட்கிழமை ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவலை அடுத்து பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அதன்படி தலைமைச் செயலரை தலைவராக கொண்ட டாஸ்க் ஃபோர்ஸ் அமைக்கப்பட்டது. அதன் கீழ் துறைவாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டது. அதேபோன்று பொருளாதாரப் பிரச்சினைகளைச் சரிசெய்ய முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையில் பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
அதேபோன்று ஐசிஎம்ஆர் துணை இயக்குனர் பிரதீப் கவுர் தலைமையில் 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது. ஒவ்வொரு ஊரடங்கு நிறைவுபெறும்போதும் இந்தக் குழு முதல்வர், சுகாதார அமைச்சர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அடுத்து மேற்கொள்ள வேண்டிய நிலை குறித்த ஆய்வறிக்கையை அளிக்கும்.
தற்போது ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி முடிவடைய உள்ள நிலையில் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் பாதிப்பு அதிக அளவில் உள்ளதும், உயிரிழப்பு அதிகரிப்பதும் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து மற்ற மாவட்டங்களுக்கு தொற்று பரவாமல் இருக்க சென்னையைத் தனிமைப்படுத்த வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
அதேபோல் சென்னையில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 5 மண்டலங்களையாவது தனிமைப்படுத்தி நிவாரணம் வழங்க வேண்டும் என ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் தற்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஜூன் 15-ம் தேதி (திங்கட்கிழமை) மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.
வரும் திங்கட்கிழமை தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கரோனா தடுப்பு நடவடிக்கை பிரதானமாக இருக்கும் எனத் தெரிகிறது.
