

சசிகலா பற்றி யோசிக்க நேரம் இல்லை. அது பற்றிய சிந்தனை அதிமுக அரசுக்கு இல்லவே இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
கோவில்பட்டி அருகே வேலாயுதபுரம் ஈ.வே.ஏ.வள்ளிமுத்து நாடார் தொடக்க மற்றும் உயர் நிலைப் பள்ளியில் படிக்கும் 500 மாணவ மாணவிகளின் குடும்பத்துக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு மாணவ மாணவிகளின் குடும்பத்துக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.
தொடர்ந்து கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்த 3 பேரை வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. அவர்களுக்கு பழங்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் ஹோமியோ மற்றும் சித்த மருந்துகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.
மேலும், மருத்துவர்களின் அறிவுரைகளை பின்பற்றும்படி அறிவுறுத்தினார். தொடர்ந்து கோவில்பட்டி கதிரேசன் கோவில் சாலை நடைபெறும் தார் சாலை அமைக்கும் பணிகளை பார்வையிட்டார். பின்னர் நகராட்சி அலுவலகத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணியை ஆய்வு செய்தார்.
கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர் மணிகண்டன், சுகாதார துறை துணை இயக்குனர் அனிதா, அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் கமலவாசன், நகராட்சி ஆணையாளர் ராஜாராம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை அனைவரும் பாராட்டுகின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் மு.க.ஸ்டாலின் ஆலோசனைகள் வழங்கலாம்.
சட்டமன்றம் ஒத்திவைப்பு அதற்கு ஒரு நாள் முன்பாகவே இனிமேல் நாங்கள் சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் எனச் சொல்லி சுயநலத்துடன் ஓடியவர்கள் திமுககாரர்கள்.
ஆனால் தமிழக முதல்வர் தினமும் மருத்துவக்குழுவினர் உடன் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறார். மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சிகள் மூலமாக மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டு அறிந்து, அறிவுரைகளை வழங்குகிறார். தொலைக்காட்சி வாயிலாக மக்களிடமும் பேசுகிறார். அதேபோல் அமைச்சர்களை அவரவர் மாவட்டங்களில் வாரந்தோறும் 5 நாட்கள் தங்கி இருந்து கரோனா தடுப்புp பணிகளில் ஈடுபட உத்தரவிட்டுள்ளார். இதில் என்ன குற்றம் குறை உள்ளது என தெரியவில்லை. ஏதாவது அரசியல் செய்ய இதுபோன்று ஸ்டாலின் கூறுகிறார்.
மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின்படி நிதி நிறுவனங்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதனை மீறி செயல்படும் நிறுவனங்கள் மீது புகார் கொடுத்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் " என்றார்.
சசிகலா பற்றி யோசிக்க நேரமில்லை
சசிகலா விடுதலையாகி வந்தால் அதிமுகவில் சில மாற்றங்கள் ஏற்படுமா என்ற கேள்விக்கு? அதைப் பற்றி யோசிக்க நேரமில்லை. கரோனா வைரஸால் மக்களே பாதிக்கப்படும் நேரத்தில் அரசியல் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு இடமில்லை. அந்த சிந்தனையே அதிமுக அரசுக்கு இல்லை.