மகாராஷ்டிராவிலிருந்து விழுப்புரம் வந்த தமிழகத்தைச் சேர்ந்தவர் கரோனா தொற்றால் உயிரிழப்பு 

விழுப்புரம் நகராட்சி மின் மயானமான முக்தி.
விழுப்புரம் நகராட்சி மின் மயானமான முக்தி.
Updated on
1 min read

மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து விழுப்புரம் வந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர், கரோனா தொற்றால் உயிரிழந்தார். அவரின் உடல் விழுப்புரம் நகராட்சி மின் மயானமான 'முக்தி'யில் தகனம் செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பெரியசெவலை கிராமத்தைச் சேர்ந்த 29 வயது இளைஞர் ஒருவர், மகாராஷ்டிர மாநிலத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 28-ம் தேதி மும்பையிலிருந்து தமிழகம் வந்த சிறப்பு ரயிலில் விழுப்புரம் வந்த அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று அதிகாலை (ஜூன் 13) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் உடல் இன்று பிற்பகல் விழுப்புரம் நகராட்சி மின் மயானமான 'முக்தி'யில் போலீஸ் பாதுகாப்புடன் தகனம் செய்யப்பட்டது. இதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று வரை கரோனா வைரஸ் தொற்றால் 399 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் ஏற்கெனவே 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். சிகிச்சையில் இருந்த 333 பேர் பூரண குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள 63 பேர் அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in