

தமிழகத்தில் கரோனா சிகிச்சை, உயிரிழப்புகள் குறித்து தேவையற்ற சர்ச்சையை எதிரிக்கட்சியாக செயல்படும் ஸ்டாலின் உருவாக்கி வருகிறார். சிறப்பான முறையில் கரோனாவுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழக மொத்த தொற்று எண்ணிக்கை 40 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அதில் 70 சதவீதம் பேர் சென்னையில் கண்டறியப்பட்டுள்ளனர். சென்னையின் 6 மண்டலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
ராயபுரம் மண்டலம் 5 ஆயிரத்தை நோக்கிச் செல்ல சில நூறு எண்ணிக்கை மட்டுமே மிச்சமுள்ளது. கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட மண்டலங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நிலைமையைக் கட்டுப்படுத்த 6 அமைச்சர்களை தலா மூன்று மண்டலங்களுக்கு நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் மரண எண்ணிக்கை குறைத்துக் காட்டப்படுகிறது என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. சென்னை மாநகராட்சியில் மரண எண்ணிக்கை பாதிக்கும் குறைவாகக் காட்டப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்து உரிய தகவல் அளிக்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளதாகவும் வெளிவந்த பத்திரிகை செய்தி அடிப்படையில் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்திருந்தார்.
சென்னையின் நிலை மிக மோசமாகச் செல்கிறது. தமிழகம் முழுவதும் 2 லட்சம் பேர் அடுத்த மாதம் பாதிக்கப்படுவார்கள் என்று அரசே கூறியுள்ள நிலையில் அதிக பாதிப்புள்ள சென்னையில் 5 மண்டலங்களைத் தனிமைப்படுத்தி அவர்களுக்கு நிவாரண உதவி அளித்து கண்காணிக்க வேண்டும் என ஸ்டாலின் கோரியிருந்தார்.
இந்நிலையில் இன்று ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட சிந்தாதிரிப்பேட்டையில் மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்த அமைச்சர் ஜெயக்குமார் ஸ்டாலினுக்கு கடுமையாக மறுப்பு தெரிவித்தார்.
இது தொடர்பாக இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
“சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த சிறப்பான முறையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. கரோனா நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசின் சிறப்பான சிகிச்சையால் குணமடைந்து வீடு திரும்புகின்றனர். தமிழக அரசு சார்பில் ரேஷன் அட்டைகள் மூலம் 36 லட்சம் முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் முகக்கவசத்தை கட்டாயம் அணியவேண்டும்.
சென்னையில் 14,000 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். நமது மருத்துவர்கள் குணப்படுத்தும் விஷயத்தில் உயிரைக் கொடுத்துப் பாதுகாக்கின்றனர். மொத்த சதவீதத்தில் பார்த்தால் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 55 சதவீதமாக உள்ளது. இந்த நேரத்தில் அவதூறு பரப்புவதில் எதிர்க்கட்சி குறிப்பாக எதிரிக்கட்சியாக இருக்கும் ஸ்டாலின் முனைப்பாக இருக்கிறார். அரசை விமர்சிப்பதை விட அரசுக்கு உதவ முன் வர வேண்டும்.
கரோனா மரணங்களை மறைக்கவேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. இங்கு நெடுஞ்செழியன் காலனியிலேயே ஒருவர் இறந்துவிட்டார். அதை மறைக்க முடியுமா? இறந்தவர்களை அடக்கம் செய்ய அதற்குரிய வழிவகைகள் உள்ளன. எப்படி மறைக்க முடியும். ஆகவே அது தவறான தகவல்”.
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.