கரும்பாட்டுக் குளத்தைக் காப்பாத்திக் கொடுங்க: குமரி விவசாயிகள் கோரிக்கை

கரும்பாட்டுக் குளத்தைக் காப்பாத்திக் கொடுங்க: குமரி விவசாயிகள் கோரிக்கை
Updated on
1 min read

கன்னியாகுமரி மாவட்டம், கரும்பாட்டுக்குளம் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. இதனால் போதிய தண்ணீர் வசதி இல்லாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இதனால் மாவட்ட நிர்வாகம் கரும்பாட்டுக் குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பச்சைத் தமிழகம் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து பச்சைத் தமிழகம் கட்சியின் தென்மண்டலத் தலைவர் சங்கரபாண்டியன் ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் கூறுகையில், “ஆரல்வாய் மொழியில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான கரும்பாட்டுக்குளம் உள்ளது. இக்குளத்தின் மூலம் இந்த சுற்றுவட்டாரத்தில் உள்ள பல ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. இந்நிலையில் இக்குளத்தின் நீர்வரத்து மற்றும் பாசனக் கால்வாய்கள் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுவிட்டதால் குளம் பெருகாமல் போய், அதை நம்பி இருக்கும் விவசாயிகள் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

குறிப்பாக, கரும்பாட்டுக்குளத்திற்கு நீர்வரும் பிரதானக் கால்வாய் முழுக்க ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், இப்பகுதியில் தொடரும் மணல் திருட்டால் கரையிலும் உடைப்பு ஏற்பட்டு குளத்திற்கு வரும் நீர், வேறு பகுதி வழியாக வீணாக வெளியேறுகிறது. இதேபோல் இக்குளத்தில் இருந்து இரண்டு மடைகள் வழியாகத் தண்ணீர் வெளியேறி ஐந்து கால்வாய்கள் மூலம் விவசாய நிலங்களுக்குச் சென்று கொண்டிருந்தது. இவையும் அருகில் உள்ளவர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

இக்குளத்தில் இருந்து வெளியேறும் உபரி நீர் கிருஷ்ணன் குளத்திற்குச் செல்லும். இதன் மறுகால் ஓடையும் பலரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் விவசாயம் கேள்விக்குறியான நிலையில், இப்பகுதியில் குடிநீர் விநியோகத்திற்கு அமைக்கப்பட்ட ஆழ்குழாய்க் கிணறுகளும் வற்றிப் போய்க் குடிநீர் ஆதாரமும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆக மொத்தத்தில் விவசாயிகளும், பொதுமக்களும் பயன்படுத்தி வந்த இக்குளம் இப்போது பயனற்ற நிலையில் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கிக் கிடக்கிறது. எனவே இந்தக் குளத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள், கரைப் பகுதி மற்றும் பாசன, நீர் வரத்துக் கால்வாய்களின் ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்றி குளத்தை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in