

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் பதல்குமார்தாஸ் (23). கடந்த 5 ஆண்டுகளாக கோவை கே.கே.புதூரில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
இவர், சில தினங்களுக்கு முன் தனது ட்விட்டர் பக்கத்தை பார்த்தபோது, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த நடிகர் சபியாச்சிமிஸ்ரா என்பவர், தமிழகத்திலுள்ள ஒடிசா மாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல உதவுவதாக பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து, சொந்த ஊர் திரும்ப அவரிடம் ட்விட்டர் மூலமாக பதல்குமார்தாஸ் உதவி கேட்டிருந்தார். அதன்பின், பதல்குமார்தாஸை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியவர், தான் நடிகர் சபியாச்சி மிஸ்ராவின் பிரதிநிதி என்றும், சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல ரூ.6 ஆயிரம் செலவாகும் என்றும், சொந்த ஊருக்கு சென்றவுடன் ரூ.12 ஆயிரமாக திருப்பிக் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
சந்தேகமடைந்த பதல்குமார்தாஸ், நேற்று முன்தினம் அந்த நபரை மேட்டுப்பாளையம் சாலை பேருந்து நிலையம் அருகே பணம் வாங்க வருமாறு அழைத்தார். அதன்படி, அங்கு வந்த நபரை பிடித்து, சாயிபாபாகாலனி போலீஸில் ஒப்படைத்தார். விசாரணையில், ஒடிசாவைச் சேர்ந்த கோபால் சந்திர சாகோ(32) என்பதும், கோவை சரவணம்பட்டியில் தங்கி பணிபுரிவதும் தெரிந்தது. சாயிபாபா காலனி போலீஸார் வழக்கு பதிந்து, அவரை கைது செய்தனர்.