

ஜம்முவில் பாதுகாப்பு பணியில் இருந்த போது மரணமடைந்த மதியழகனின் மனைவி தமிழரசிக்கு அரசுப்பணி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஜம்மு யூனியன் பிரதேசம், அக்னூர் செக்டர் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் மதியழகன் கடந்த ஜூன் 4-ம் தேதி மரணமடைந்தார். அவரது மனைவி தமிழரசி, மகன் ரோகித், மகள் சுப, தந்தை பெத்தா கவுண்டர், தாயார் ராமாயி ஆகியோர் முதல்வர் பழனிசாமியை எடப்பாடியில் உள்ள பயணியர் மாளிகையில் சந்தித்து, கோரிக்கை மனு அளித்தனர்.
இந்த கோரிக்கை மனுவை பரிசீலித்த முதல்வர் பழனிசாமி, மதியழகனின் மனைவி தமிழரசிக்கு அரசுப்பணி வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.