Last Updated : 12 Jun, 2020 07:11 PM

 

Published : 12 Jun 2020 07:11 PM
Last Updated : 12 Jun 2020 07:11 PM

மதுரைக்குள் வந்த 10 ஆயிரம் பேருக்கும் உடனடிப் பரிசோதனை செய்யாவிட்டால் தூங்காநகரம் துயர்மிகு நகரமாகிவிடும்: சு.வெங்கடேசன் எச்சரிக்கை

அமைச்சர்கள் தமிழ்நாடு முழுமைக்கும் பொறுப்பானவர்கள் என்றாலும், சொந்த மாவட்டத்தின் மீது அவர்கள் காட்டுகிற அக்கறையானது அவர்களது அரசியல் மற்றும் பொதுவாழ்விற்கான அஸ்திவாரத்தைப் போன்றது. சொந்த மாவட்டத்தில் செல்வாக்குள்ளவர்கள்தான் ஆட்சி அதிகாரத்திலும், கட்சி நிர்வாகத்திலும் ஆளுமை செலுத்த முடியும் என்பதற்குத் தமிழ்நாட்டில் நிறைய உதாரணங்களைச் சொல்லலாம்.

ஆனால், மதுரை மாவட்ட அமைச்சர்கள் இதற்கு விதிவிலக்காக இருக்கிறார்கள். ஒவ்வொரு ஊரிலும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடத்தியபோது, அந்தந்த மாவட்டங்களுக்குச் சிறப்புத் திட்டங்களை அறிவித்தார் முதல்வர். ஆனால், மதுரையில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்குப் பெயரிட்டதோடு சரி. எய்ம்ஸ் மருத்துவமனை, திருமங்கலம் பஸ் போர்ட், விமான நிலைய விரிவாக்கம், கோரிப்பாளையம் மேம்பாலம், மதுரை துணைநகரம், மோனோ ரயில் திட்டம் போன்றவை இன்னமும் கிடப்பில் கிடக்கின்றன. கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் என்று இரு சீனியர் அமைச்சர்கள் இருந்தாலும்கூட இந்தக் காரியங்கள் கைகூடவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்கிறது.

மக்கள் உயிர் பயத்தோடு வாழ்கிற இந்த கரோனா காலத்தில் வெறுமனே அரிசி, பருப்பு வழங்குவதைத் தாண்டி பரிசோதனை, சிகிச்சை விஷயத்தில் அக்கறை காட்டவில்லை என்ற குற்றச்சாட்டுக்கும் இப்போது மதுரை அமைச்சர்கள் ஆளாகியிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களோடு ஒப்பிட்டால், கரோனா தடுப்பு நடவடிக்கையிலும், பரிசோதனையிலும் மிகமிக பின்தங்கியிருக்கிறது மதுரை மாவட்டம்.

ஒவ்வொரு மாவட்ட மக்கள் தொகை, அதில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை என்கிற விகிதாரச்சாரப்படி மதுரை 30-வது இடத்தில் இருக்கிறது. கன்னியாகுமரி, தேனி போன்ற சிறிய மாவட்டங்களையும் விடக் கீழே இருக்கிறது மதுரை. அதேபோல, சென்னையில் இருந்து வருகிறவர்களை மற்ற மாவட்டங்கள் எல்லாம் தனிமைப்படுத்தி, பரிசோதிக்கிறபோது மதுரையில் அந்த நடைமுறைகளை அவ்வளவு தீவிரமாகக் கடைப்பிடிக்கவில்லை. இதன் காரணமாக, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நீதிபதி உள்பட 19 பேருக்கு கரோனா பரவிவிட்டதாக வழக்கறிஞர்கள் கூறியும் மாவட்ட நிர்வாகம் சுதாரிக்கவில்லை.

இந்த நிலையில், இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன்.

“மக்கள் தொகை விகிதாச்சாரத்தின்படி ஒரு லட்சம் பேருக்கு செய்யப்பட்ட சோதனையின் அளவு தமிழக அளவில் 6,420 ஆக இருக்கிறது. ஆனால், மதுரையிலோ அந்த எண்ணிக்கை பாதியாகத்தான் இருக்கிறது. அதாவது 1 லட்சம் பேரில் வெறும் 3,975 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மே 29 முதல் ஜூன் 7-ம் தேதி வரையிலான 10 நாட்களில் சராசரியாக 250 பரிசோதனைகள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன என்றும், ஆனால், வருவாய்த்துறை அமைச்சரோ ஒவ்வொரு முறை ஆய்வுக்கூட்டம் நடத்திவிட்டு அதிக அளவில் பரிசோதனை செய்யப்படுகிறது என்று ஊடகங்களிடம் உண்மைக்கு மாறான தகவலைச் சொல்கிறார்” என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார் சு.வெங்கடேசன்.

இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியரிடமும், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரிடமும் புகார் செய்தார் சு.வெங்கடேசன். இதைத் தொடர்ந்து கடந்த 10, 11, 12-ம் தேதிகளில் மதுரை மாவட்டத்தில் செய்யப்படுகிற பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்திருக்கிறது மாவட்ட சுகாதாரத்துறை. வெறும் 200 முதல் 400-க்குள் இருந்த பரிசோதனைகளின் எண்ணிக்கை இப்போது 700 முதல் 900 ஆக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. மதுரை மாவட்ட எல்லைக்குள் நுழையும் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள மதுரை மாவட்ட நிர்வாகம் இன்று உத்தரவிட்டுள்ளது.

"இந்த எண்ணிக்கை போதாது. தினமும் 3 ஆயிரம் பேருக்குப் பரிசோதனை செய்யப்பட வேண்டும். அதேபோல கடைசி 10 நாட்களில் சென்னையில் இருந்து மதுரைக்கு வந்த 10 ஆயிரம் பேருக்கும் தாமதமின்றிப் பரிசோதனை செய்ய வேண்டும். இல்லை என்றால் தூங்காநகரம் துயர்மிகு நகரமாகிவிடும்" என்று சு.வெங்கடேசன் எம்.பி. எச்சரித்துள்ளார்.

"தலைநகர் சென்னையில் கரோனாவை ஒழிக்க தமிழ்நாடு அரசு அமைத்துள்ள 5 அமைச்சர்கள் கொண்ட குழுவில் அங்கம் வகிக்கிறார் அமைச்சர் உதயகுமார். அதிக பாதிப்புள்ள பகுதிக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்கிற அடிப்படையில், சென்னையில் தங்கி 1, 2, 6 ஆகிய மண்டலங்களில் பணியாற்றுகிறார் அமைச்சர். இந்த இக்கட்டான நேரத்தில் சொந்த மாவட்டத்தைக் கண்டுகொள்ளவில்லை என்று குற்றம் சாட்டுவது நியாயமற்றது. விரைவில் உதயகுமாரிடம் இருந்து சு.வெங்கடேசனுக்குப் பதில் சொல்லும் விதமாக அறிக்கை வரக்கூடும்" என்கிறார்கள் மதுரை அதிமுகவினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x