

உயர் நீதிமன்றத்தில் மின்னஞ்சல் முறையில் வழக்கு தாக்கல் செய்வதில் உள்ள சிரமங்களைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கரோனா ஊரடங்கால் சென்னை உயர் நீதிமன்றம், அதன் மதுரைக் கிளை மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் வீடியோ கான்பரன்ஸ் வசதியில் அவசர வழக்குகள் மட்டும் விசாரிக்கப்படுகின்றன.
மதுரையில் கரோனா அச்சம் குறைந்ததால் 2 மாதங்களுக்குப் பிறகு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை திறக்கப்பட்டு ஜூன் 1 முதல் நேரடி விசாரணை மற்றும் நேரடியாக மனுத் தாக்கல் செய்வது தொடங்கியது.
நீதிபதி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதால் நேரடி விசாரணை நிறுத்தப்பட்டு மீண்டும் வீடியோ கான்பரன்ஸ் விசாரணை தொடங்கப்பட்டது.
வீடியோ கான்பரன்ஸ் வசதியில் வழக்குகளை விசாரிக்க பதிவாளரின் மின்னஞ்சல் முகவரிக்கு மனுக்களை அனுப்ப வேண்டும். பின்னர் அந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட நீதிபதியின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு விசாரணைப் பட்டியலில் சேர்க்கப்படும். இந்த முறையில் பல்வேறு சிரமங்களைச் சந்திப்பதாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக உயர் நீதிமன்றக் கிளை வழக்கறிஞர்கள் சிலர் கூறியதாவது:
''மின்னஞ்சலில் மனுக்களை அனுப்பும்போது, அந்த மனு பதிவுத்துறையைச் சென்றடைந்தற்கு எந்த அத்தாட்சியும் மின்னஞ்சலில் அனுப்புவதில்லை. மனு வந்ததா? இல்லையா? என்பதை உறுதி செய்ய தரைவழி தொலைபேசி எண்கள் அளிக்கப்பட்டுள்ளன.
அந்த எண்களைத் தொடர்பு கொண்டால் தொலைபேசியை எடுப்பவர், விவரங்களைக் கேட்டுவிட்டு, பார்த்துச் சொல்வதாக இணைப்பைத் துண்டித்து விடுகிறார்.
திரும்ப அதே எண்ணிற்கு போன் செய்தால் யாரும் எடுப்பதில்லை. 2, 3 நாட்களுக்குப் பிறகே வழக்கு எண் வழங்கப்படுகிறது.
இதனால் மின்னஞ்சலில் தாக்கல் செய்யப்படும் மனுக்கள் பதிவுத்துறையைச் சென்றடைந்ததா? இல்லையா? எனத் தெரியாமல் வழக்கறிஞர்கள் தவிக்கும் நிலை உள்ளது. எனவே மின்னஞ்சலில் மனு தாக்கல் செய்யப்படும்போது அதற்குச் சான்றாக பதில் மின்னஞ்சல் அனுப்ப வேண்டும். மனுக்களின் நிலை குறித்து விசாரிக்க தரைவழி தொலைபேசி எண்ணிற்குப் பதிலாக ஒவ்வொரு பிரிவிலும் முக்கிய அலுவலரின் வாட்ஸ் அப் எண் வழங்க வேண்டும்.
வழக்கு எண் வழங்கினால் அதை சம்பந்தப்பட்ட வழக்கறிஞருக்குத் தெரிவிக்க வேண்டும். அதேபோல் உத்தரவு நகலையும் வழக்கறிஞரின் வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்''.
இவ்வாறு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.