Published : 12 Jun 2020 06:09 PM
Last Updated : 12 Jun 2020 06:09 PM

கரோனா தொற்றுடன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் சுற்றினால் சட்ட நடவடிக்கை: சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வரும் நபர்கள் வீட்டை விட்டு வெளியே சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எந்தவொரு அறிகுறியும் இன்றி கரோனா வைரஸ் நோய்த்தொற்று கண்டறியப்பட்ட நபர்கள் அவர்களின் வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், கரோனா வைரஸ் தொற்று பாதித்து வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட சில நபர்கள் அவர்களின் வீட்டை விட்டு வெளியே சென்று வருவதாகப் புகார்கள் வந்து கொண்டு இருக்கின்றன.

அவ்வாறு அவர்கள் தனிமைப்படுத்துதலையும் மீறி வெளியில் செல்லும்போது பிற நபர்களும் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர். இதனால், கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுகுறித்துப் பலமுறை அவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அவ்வாறு கரோனா வைரஸ் தொற்று பாதித்து வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வெளியே சென்ற 40 நபர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கை (FIR) பெறப்பட்டுள்ளது.

அவர்களின் விவரங்கள் மண்டலம் வாரியாக பின்வருமாறு :

மண்டலங்கள் FIR பதிவு செய்யப்பட்ட புகார்கள்

திருவொற்றியூர் 4, மணலி 1, மாதவரம் 1, தண்டையார்பேட்டை 7, ராயபுரம் 7, திரு.வி.க.நகர் 1, அம்பத்தூர் 1, அண்ணாநகர் 3, தேனாம்பேட்டை 3, கோடம்பாக்கம் 3, வளசரவாக்கம் 3, அடையாறு 2,பெருங்குடி 2, சோழிங்கநல்லூர் 2, மொத்தம் 40.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இதுபோன்று வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வரும் நபர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே சென்றால் அவர்களின் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அவர்களையும், அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களையும் கோவிட்-19 மையங்களில் தங்க வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்”.

இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x