

கரோனா காலத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2 மாதங்களாக பல்நோக்கு பணியாளர்களுக்கு ஊதியம் வழங்காததால் அதிருப்தியில் உள்ளனர்.
தமிழகம் முழுவதும் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் 2 முதல் 6 வரையிலான தற்காலிக பல்நோக்கு பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
அவர்கள் துப்புரவு பணி, நோயாளிகளுக்கு டோக்கன் வழங்கல், காயங்களுக்கு மருந்து கட்டுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மாநிலம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது. கரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் பல்நோக்கு பணியாளர்களுக்கு வேலைப் பளுவும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் அவர்களுக்கு ஏப்ரல், மே ஆகிய 2 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை. இதனால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து பல்நோக்கு பணியாளர்கள் கூறியதாவது: பெரும்பாலானோர் 7 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிகிறோம். ஐந்து ஆண்டுகளில் எங்களை பணி நிரந்தம் செய்வதாக கூறிவிட்டு, கண்டுகொள்ளவில்லை.
மேலும் எங்களுக்கு 2 மாதங்களாக ஊதியம் வழங்காததால் கடன் வாங்கி செலவு செய்யும் நிலை உள்ளது.
கரோனா தொற்று பரவி வருவதால் வேலைப்பளுவும் அதிகரித்துள்ளது. உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும், என்று கூறினர்.