பெட்ரோல் - டீசல் விலையை உயர்த்தும் போக்கை உடனடியாகக் கைவிட வேண்டும்: யுவராஜா வலியுறுத்தல்

எம்.யுவராஜா | கோப்புப் படம்.
எம்.யுவராஜா | கோப்புப் படம்.
Updated on
1 min read

பெட்ரோல் - டீசல் விலையை உயர்த்தும் போக்கை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று தமாகா இளைஞரணித் தலைவர் எம்.யுவராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தொடர்ந்து ஆறு நாளாக தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படவில்லை. மாறாக கடந்த 83 நாட்கள் மாறுதல் இல்லாமல் இருந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை 7 ஆம் தேதி உயர்த்தப்பட்டது.

ஊரடங்கு தொடங்கும்போது 72.28 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல், இன்று லிட்டருக்கு 51 காசுகள் உயர்ந்து ரூ.78.47க்கு விற்கப்படுகிறது 65.71 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் டீசல் இன்று லிட்டருக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.71.14 க்கு விற்கப்படுகிறது.

கடந்த 6 நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு சுமார் மூன்று ரூபாய் விலை உயர்ந்துள்ளது. வாகனங்கள் வைத்திருப்போரையும், ஏழை - எளிய, நடுத்தர மக்களையும் கடுமையாகப் பாதித்துள்ளது. மத்திய அரசின் தொடர் விலையேற்றம் மற்றும் தமிழக அரசின் மதிப்புக் கூட்டு வரி உயர்வு ஆகியவற்றால் பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே போகிறது.

தமிழகம் முழுவதும் ஊரடங்குத் தளர்வு என அறிவித்துவிட்டு, மறுபுறம் பெட்ரோல், டீசல் கட்டண உயர்வு என்று மக்களைத் தொடர்ந்து துன்புறுத்தி வருவது மிகுந்த வருத்தமளிக்கிறது. மேலும் கடந்த 3 மாதங்களாக வேலையில்லாமல் இப்போதுதான் மக்கள் அனைவரும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் அனைவரும் தங்கள் சொந்த வாகனத்தில் வேலைக்குச் செல்கின்றனர். அரசின் இந்தமாதிரியான விலையேற்றம் மக்களை மிகவும் வருத்தமடையச் செய்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலையைத் தொடர்ந்து மத்திய அரசும்- தமிழக அரசும் போட்டி போட்டுக் கொண்டு உயர்த்திக் கொண்டிருப்பதை தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணியின் சார்பாக கைவிட வலியுறுத்துகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in