சென்னையில் இருந்து அதிகமானோர் தேனிக்கு குவிவதாக புகார்: தேனி-மதுரை எல்லையில் வாகன தணிக்கை மீண்டும் கெடுபிடி
சென்னையில் இருந்து அதிகமானோர் தேனிக்கு குவிவதாக புகார் எழுந்ததையடுத்து தேனி-மதுரை எல்லையில் வாகன தணிக்கை மீண்டும் கெடுபிடி செய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவில் தளர்வு செய்யப்பட்டு, மண்டல வாரியாக போக்குவரத்துகள் இயக்கப்பட்டு வருகிறது. ஒரே மண்டலத்திற்குள் இ-பாஸ் தேவையில்லை என்றும், அதே நேரத்தில் ஒரு மண்டத்தில் இருந்து மற்றொரு மண்டலத்திற்கு செல்ல கண்டிப்பாக இ-பாஸ் எடுக்க வேண்டும் என்றும் அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்ட நாளில் இருந்து ஏராளமானோர் சென்னை உள்ளிட்ட பல்வேறு மண்டலங்களில் இருந்து தேனி மாவட்டத்திற்கு வந்ததாக புகார் எழுந்தது.
வெளியூர்களில் இருந்து வருபவர்களை சுகாதாரத்துறையினர் கண்டறிந்து அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அதில் பலருக்கும் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் வேறு மண்டலங்களில் இருந்து தேனி மாவட்டத்திற்குள் வருபவர்களை கண்காணிக்கும் வகையில் போலீசார் நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து தேனி மாவட்ட எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள போலீஸ் சோதனை சாவடிகளில் வாகன தணிக்கையை தீவிரப்படுத்த தேனி மாவட்ட எஸ்.பி சாய்சரண் தேஜாஸ்வி உத்தரவிட்டார்.
இதனையடுத்து ஆண்டிப்பட்டி அருகே கணவாய் மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள போலீஸ் சோதனை சாவடியில் வாகன தணிக்கையை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி வெளி மண்டலங்களில் இருந்து தேனி மாவட்டத்திற்குள் வருபவர்கள் விபரம் மற்றும் பயணித்திற்கான இ-பாஸ் ஆகியவை உள்ளதா? என்று சோதனை செய்யப்பட உள்ளது.
இதுதவிர சுகாதாரத்துறை உதவியுடன் வெளி மண்டலங்களில் இருந்து தேனி மாவட்டத்திற்குள் வருபவர்கள் உடல்நிலை பரிசோதனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இ-பாஸ் இன்றி பயணம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், அவர்கள் பயணித்த வாகனத்தை பறிமுதல் செய்யப்படும் என்றும் போலீசார் அறிவித்துள்ளனர்.
இதற்கிடையே கடந்த சில வாரங்களில் சென்னை உள்ளிட்ட வெளி மண்டலங்களில் இருந்து தேனி மாவட்டத்திற்குள் வந்திருப்பவர்கள் குறித்து அந்தந்த பகுதி மக்கள் சுகாதாரத்துறை மற்றும் போலீஸாருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றும் எஸ்.பி சாய்சரண் தேஜஸ்வி கேட்டுக்கொண்டுள்ளார்.
