

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மத்தியில் வெளியூர்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு வருவோரால் கரோனா அதிகரித்த வண்ணம் உள்ளது.
களியக்காவிளை, மற்றும் ஆரல்வாய்மொழி சோதனை சாவடிகளில் வெளியூர்களில் இருந்து வருவோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுவரை இரு சோதனை சாவடிகளிலும் 26400 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கரோனா பாதித்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் தற்போது 50 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை கரோனாவிற்கு சிகிச்சை பெற்ற 81 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 131 பேராக உயர்ந்துள்ளது.
இதில் சென்னையில் இருந்து நாகர்கோவில் தளவாய்புரத்தை சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர், அவரது மனைவி, மற்றும் கப்பியறை, காட்டாத்துறையை சேர்ந்தவர்கள் என 5 பேர் ஒரே காரில் நாகர்கோவில் வந்தனர். ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியில் அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
அவர்கள் 5 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை, மற்றும் வெளியூர்களில் இருந்து வருவோருக்கு கரோனா தொற்று அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து குமரி சோதனை சாவடிகளில் தீவிரமாக சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.