

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மேலும் 16 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று வரை கரோனாவால் மொத்தம் 397 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 18 பேர் சென்னையில் இருந்து வந்தவர்கள் என்பதால், அவர்களது பெயர் சென்னை பட்டியலில் சேர்க்கப்பட்டது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 379 என பட்டியலில் இருந்தது. இந்நிலையில் மாவட்டத்தில் இன்று மேலும் 16 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதில் கொங்கராயக்குறிச்சிக்கு சென்னையில் இருந்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தச் 5 பேர், காயல்பட்டினத்துக்கு வந்த 4 பேர் உள்பட சென்னையில் இருந்து வந்தவர்கள் மட்டும் 13 பேர் ஆவர்.
சென்னையில் இருந்து இ-பாஸ் மூலம் வருவோரால் மாவட்டத்தில் கரோனா தொற்று தொடர்ந்து கட்டுப்படுத்த முடியாமல் அதிகரித்து வருகிறது.
இதேநேரத்தில் கரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏற்கனவே 264 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், நேற்று மாலையில் மேலும் 23 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
இதனால் இதுவரை கரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 287 ஆக அதிகரித்துள்ளது.