Published : 12 Jun 2020 04:41 PM
Last Updated : 12 Jun 2020 04:41 PM

கோவையில் ரூ.40 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி பணிகள்: அமைச்சர் வேலுமணி தொடங்கி வைத்தார்

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 40.70 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், கடந்த சில வருடங்களாக நவீன சாலைகள், பொழுதுபோக்குப் பூங்காக்கள், சிறுவர் பூங்காக்கள், விளையாட்டுத் திடல், தெருவிளக்குகள் போன்ற பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ், உக்கடம் பெரிய குளம், வாலாங்குளம், முத்தண்ணன் குளம் என கோவை மாநகரின் மையப் பகுதியில் உள்ள பல்வேறு குளங்கள் புதுப்பொலிவு பெற்றுவருகின்றன.

இத்திட்டத்திற்கு வலுசேர்க்கும் விதமாக, கோவை மாவட்டத்தின் அடையாளமாக விளங்கிவரும் பந்தய சாலையை மாதிரி சாலையாக அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதற்காக 40.70 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று பூமி பூஜை செய்து தொடங்கிவைத்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர், “கோவை பந்தய சாலை நடைபாதை பொதுமக்களுக்குப் பெரிதும் பயன்பட்டு வருகிறது. பந்தய சாலை விரிவாக்கத் திட்டத்தில், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க சீரான அகலமுள்ள சாலைகள் வடிவமைக்கப்பட இருக்கின்றன. போக்குவரத்தை எளிதாக்க அனைத்துச் சந்திப்புகளும் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு அகலப்படுத்தப்பட உள்ளன. ‘சிந்தட்டிக்’ தரைத் தளத்துடன் கூடிய குழந்தைகள் பூங்கா, புதிய விளையாட்டு உபகரணங்களுடன் அமைக்கப்பட உள்ளது. குறிப்பிட்ட இடங்களில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிப்பறை மற்றும் பாதுகாப்பு அறைகள் அமைக்கப்படும்.

பாதுகாப்பு வசதிக்காக முக்கிய இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும். சாலையோரங்களில் சிற்றுண்டிக் கடைகள், பூங்காக்களைப் பராமரிக்க திறன் மேம்படுத்தப்பட்ட தனியார் பாசன அமைப்பு, நிலத்தடி நீர் அதிகரிக்கும் பொருட்டு மழை நீர் சேகரிப்புத் தொட்டி வசதி ஆகியவையும் அமைக்கப்பட உள்ளன.

மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள் போன்ற அனைத்தும் நிலத்தடியில் செல்லும் வண்ணம் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நடைபாதை ஓரங்களில் நவீன மின்விளக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. பாதசாரிகளின் பாதுகாப்பிற்காக வாகனங்கள் உள்ளே வராமல் இருக்கும் வகையில் நுழைவாயில்களில் தடைகள் அமைக்கப்படும்” என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி, எம்எல்ஏக்கள் அருண்குமார், அர்ச்சுனன், சண்முகம், மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x