

மதுரை மாவட்டக் கட்டிடத் தொழிலாளர்கள் சங்கம் சார்பாக தொழிலாளர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் இன்று நடைபெற்றது.
மதுரை மாவட்டக் கட்டிடத் தொழிலாளர் சங்கத்தினர் மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் உள்ள தொழிலாளர் துறை அலுவலகம் முன்பு முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
அப்போது, ‘’கரோனா வைரஸ் தொற்று மேலும் பரவாமல் இருப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பல்வேறு தொழில் செய்து வரும் உடலுழைப்புத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் தமிழக அரசு நிவாரணத் தொகையாக கட்டுமானத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூபாய் 7,500 வீதம் மூன்று மாதங்களுக்கு வழங்கிட வேண்டும்.
பென்ஷன் மற்றும் உதவித்தொகை தங்கு தடையின்றில் கிடைப்பதற்கு வழிவகை செய்திட வேண்டும்’’ என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். அதன்பின், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
இதேபோல தென் தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களிலும் கட்டிடத் தொழிலாளர்களின் மனு கொடுக்கும் போராட்டம் இன்று நடைபெற்றது.