Last Updated : 12 Jun, 2020 04:18 PM

 

Published : 12 Jun 2020 04:18 PM
Last Updated : 12 Jun 2020 04:18 PM

புதுச்சேரியில் 14 வயதுச் சிறுமி உட்பட 7 பேருக்குக் கரோனா உறுதி; மேலும் ஒரு முதியவர் உயிரிழப்பு

புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 14 வயதுச் சிறுமி உட்பட 7 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒரு முதியவர் உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் நேற்று வரை கரோனா தொற்றால் 157 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 88 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 67 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், புதுச்சேரி அரும்பார்த்தபுரத்தைத் தற்காலிக முகவரியாகத் தெரிவித்திருந்த விழுப்புரம் மாவட்டம், குமளம் பகுதியைச் சேர்ந்த முதியவர் மற்றும் முத்தியால்பேட்டையைச் சேர்ந்த முதியவர் என 2 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் தற்போது புதுச்சேரியில் புதிதாக 6 பேர், காரைக்காலைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமி ஒருவர் என 7 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த 82 வயதுடைய ஒரு முதியவர் உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், சுகாதாரத்துறை செயலர் பிரசாந்த்குமார் பாண்டா ஆகியோர் இன்று (ஜூன் 12) செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘புதுச்சேரி மாநிலத்தில் மேலும் 7 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4 பேர் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியிலும், ஜிப்மரில் ஒருவரும், வெளி மாநிலத்தில் ஒருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி காரைக்காலைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமி ஒருவருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், முதலியார்பேட்டை போலீஸ் சந்து பகுதியைச் சேர்ந்த 82 வயது முதியவர் இதயக் கோளாறு, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார்.

சில நாட்களுக்கு முன்பு அவர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் சந்தேகத்தின் பேரில் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு 2 முறை கரோனா பரிசோதனை செய்ததில் நெகடிவ் என்று வந்தது. இந்நிலையில் நேற்று (ஜூன் 11) மாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மீண்டும் அவருக்கு பரிசோதனை செய்தபோது கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த புதுச்சேரியை சேர்ந்த 2-வது நபர் இவர் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 163 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 84 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியில் 6 பேர், ஜிப்மரில் 4 பேர் என மொத்தம் 10 பேர் குணமடைந்து வீட்டுக்குச் சென்றுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 9,250 பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 8,979 பரிசோதனை நெகடிவ் என்று வந்துள்ளது. 104 பரிசோதனைகள் முடிவுக்காகக் காத்திருப்பில் உள்ளன.

மேலும் மண்ணாடிப்பட்டு மாரியம்மன் கோயில் தெரு, அரும்பார்த்தபுரம் டீச்சர்ஸ் காலனி, தருமாபுரி தனகோடி நகர் 4-வது குறுக்குத் தெரு ஆகியவை கட்டுப்பாட்டு மண்டலத்திலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. கரோனா தொற்று உள்ளவர்களை வீட்டிலேயே வைத்துச் சிகிச்சை அளிப்பது என்று ஆந்திர மாநில அரசு ஓர் அரசாணை வெளியிட்டுள்ளது.

இவ்வாறு சிகிச்சை பெறுவோரை நடமாடும் மருத்துவக் குழு அடிக்கடி சென்று சோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் எதிர்காலத்தில் நோய்த் தொற்று அதிகம் ஏற்பட்டால் இதே முறையை நாம் கடைப்பிடிக்க வேண்டி இருக்கும். மார்ச் 24-ம் தேதியிலிருந்து 54 நாட்கள் ஒற்றை இலக்கத்தில் இருந்த தொற்று, மத்திய, மாநில அரசுகளின் தளர்வு காரணமாக அதிகமாகி உள்ளது.

தற்போது வரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து சிலருக்குப் பரவும் நிலைதான் புதுச்சேரியில் உள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சரியான தகவல்களைக் கொடுக்காததன் காரணமாகவும், ஆரோக்கிய சேது செயலியைப் பதிவு செய்யாததாலும் அவர்கள் யாருடன் தொடர்பில் இருந்தார்கள் என்பதை உடனடியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை.

கண்டுபிடிக்க முடியாத இந்த 10 சதவீதம் பேரால் பிறருக்கும் தொற்று ஏற்படுகிறது. இதிலிருந்து நாம் தப்பித்துக் கொள்ள வேண்டும் என்றால், தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும், கைகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்’’ என்றனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார், இந்திய முறை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநர் ஸ்ரீராமலு ஆகியோர் கூறுகையில், ‘‘புதுச்சேரியில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் வகையில் ஆர்சனிக் ஆல்பம் மருந்து முத்தியால்பேட்டை, ராஜ்பவன் ஆகிய தொகுதி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அனைத்துத் தொகுதிகளிலும் இந்த மருந்து வழங்கப்படும். ஒரு வயதுக் குழந்தை முதல் பெரியவர் வரை 3 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் 3 மாத்திரைகள் சாப்பிட வேண்டும். மாத்திரை சாப்பிட்ட 30 நிமிடங்கள் வரை உணவு உள்ளிட்ட எந்த ஆகாரமும் எடுத்துக் கொள்ளக் கூடாது.

நீரிழிவு, ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கும் இந்த மாத்திரையைச் சாப்பிடலாம். கர்ப்பிணிகள் மட்டும் சாப்பிடக் கூடாது. 3 நாட்கள் சாப்பிட்ட பின் 15 நாட்களுக்குப் பிறகு மீண்டும் 3 நாட்கள் சாப்பிட வேண்டும். ஆர்சனிக் ஆல்பத்தைத் தொடர்ந்து கபசுரக் குடிநீரும் பொதுமக்களுக்கு வழங்கப்படும். இது நோய் வரும் முன் காத்துக் கொள்வதே தவிர நோய் வந்த பிறகு சாப்பிடும் மருந்து அல்ல’’ என்று கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x