

சென்னையிலிருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு போலி இ பாஸ் மூலம் வாகனங்கள் அதிக அளவு செல்கிறது. இதனால் மற்ற மாவட்டங்களிலும் கரோனா தொற்று அதிகரிக்கும் ஆபத்து உள்ளது.
சென்னையில் அதிகரிக்கும் கரோனா தொற்றினால், வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் மாவட்டங்களுக்கு திரும்பத் துடிக்கிறார்கள். சென்னையைவிட்டு வெளியேறத் தொடங்கியவர்கள் கிடைத்த வாகனங்களில், தங்கள் ஊர் திரும்பத் தொடங்கியிருக்கிறார்கள்.அப்படி ஊர் திரும்புவதற்கு, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்காக ஆட்சியர் அலுவலகம் மூலம் தரப்படும் இ-பாஸை போன்று போலி இ-பாஸ் தயாரித்து அதன் மூலம் ஆட்களை அழைத்து வரும் புரோக்கர்களால் பெரிய லெவலில் கட்டணக் கொள்ளையும் அடிக்கப்படுகிறது.
போலி இ பாஸ் எப்படி தயாரிக்கப்படுகிறது என விவரம் அறிந்தவர்களிடம் கேட்டபோது,
இணையம் மூலம் பதிவிறக்கம் செய்யப்படும் இ பாஸில் வாகன எண்ணையும், புறப்படும் இடம், தேதி போன்றவைகளை மாற்றிக்கொண்டு பயணிக்கிறார்கள். மேலும் தற்போது பேருந்துகளை தவிர மற்ற வாகனங்கள் வழக்கம் போல சென்றுவருகின்றன. இதனால் இதனை கிராஸ் செக் செய்யும் அளவுக்கு காவல்துறையினருக்கு நேரம் இல்லை.அப்படி ஒரு ஆப்பரேஷன் ஆரம்பித்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவாய்ப்புள்ளது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தும் முன்பு சென்னைவாசிகள் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு வருவதை தவிர்க்க முடியாது. இது போன்று கூட்டம் கூட்டமாகச் சென்னையிலிருந்து தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுக்குத் திரும்புபவர்களால் பாதுகாப்பாக இருக்கிற மற்ற மாவட்ட மக்களிடம், அச்சம் பரவியிருக்கிறது என்றனர்.
சென்னை, செங்கல்பட்டை கடக்கும் வாகனங்கள் விழுப்புரம் மாவட்டத்தில் சோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்படுகிறதா என எஸ் பி ஜெயகுமாரிடம் கேட்டபோது, ஓங்கூர், விக்கிரவாண்டி டோல்கேட்டில் முழுமையான சோதனைக்கு பின்பே பயணத்தை தொடர அனுமதிக்கிறோம். போலி இ பாஸ் மற்றும் பாஸ் இல்லாமல் வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, டிரைவர்கள் கைது செய்யப்பட்டுவருகிறார்கள் என்றார்.