Published : 12 Jun 2020 07:02 AM
Last Updated : 12 Jun 2020 07:02 AM

அரசு மேற்கொள்ளும் பல்வேறு திட்டங்கள் மூலம் குழந்தை தொழிலாளர் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்- மக்களுக்கு முதல்வர் பழனிசாமி அழைப்பு

குழந்தைத் தொழிலாளர் இல்லாதமாநிலமாக தமிழகத்தை உருவாக்க அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கும் திட்டங்களுக்கும் அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

உலகெங்கும் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் ஜூன் 12-ம்தேதி ‘குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்’ கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இப்பூமியில் பிறக்கும் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் வாழும் உரிமை, பாதுகாப்பு உரிமை மற்றும் கல்விபெறும் உரிமை மிக இன்றியமையாததாகும்.

குழந்தை தொழிலாளர் முறை என்ற கொடுமையில் இருந்து அவர்களை விடுவித்து, அவர் களுக்கு இனிமையான குழந்தைப் பருவத்தையும் முறையான கல்வியையும் தமிழக அரசு வழங்கி வருகிறது.

தமிழகத்தில் குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்கும் வகையில், அவர்களை மீட்டெடுத்து, சிறப்பு பயிற்சி மையங்களில் கல்வி கற்கவும் இலவச சீருடைகள், பாடப் புத்தகங்கள், காலணிகள், கல்வி உபகரணங்கள், சத்தான மதிய உணவு, இலவசபேருந்து பயண அட்டைகள்,மிதி வண்டிகள், மடிக்கணினிகளும் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

மேலும் உயர்கல்வி பயிலும்முன்னாள் குழந்தை தொழிலாளர்களுக்கு அவர்களின் கல்விக்காலம் முழுவதும் ரூ.500 வீதம்மாதாந்திர உதவித் தொகை என எண்ணற்ற நலத் திட்டங்களை தமிழக அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

மேலும் 18 வயது நிறைவடையாத வளரிளம் பருவத்தினர் அபாயகரமான பணிகளில் அமர்த்தப்படுவதை முற்றிலும் தடை செய்து மத்திய அரசு வெளியிட்ட சட்டதிருத்தத்தை தமிழக அரசு தீவிரமாக செயல்படுத்துகிறது. இதன்மூலம் குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றுவதில் நாட்டிலேயே முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது.

‘குழந்தைகளின் வருமானம் நாட்டுக்கு அவமானம்’ என்பதை உணர்ந்து குழந்தைகளின் உரிமைகளை மதித்து, பள்ளிக்கு அனுப்பி,குழந்தைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்க அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x