Published : 02 Mar 2014 03:56 PM
Last Updated : 02 Mar 2014 03:56 PM

மக்கள் நம்பிக்கை பெற்ற கூட்டணி காங்கிரஸ் தலைமையில் அமையும்: ஜி.கே.வாசன் பேட்டி

நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் நம்பிக்கை பெற்ற கூட்ட ணியை காங்கிரஸ் அமைக்கும் என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார்.

சென்னை எண்ணூர் துறை முகத்துக்கு காமராஜர் பெயர் கடந்த வாரம் சூட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து துறைமுக வாயிலில், 10 அடி உயர பீடத்தில் 380 கிலோ எடை கொண்ட காமராஜரின் முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப் பட்டுள்ளது. 9 அடி உயரத்தில் காமராஜர் நடந்து வருவதுபோல் அமைக்கப்பட்டுள்ள இந்தச் சிலையை மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஜி.கே.வாசன் பேசியதாவது:

தமிழகத்தின் வளர்ச்சிக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பே அடித்தளமிட்டு செயலாற்றியவர் காமராஜர். அவர் ஆட்சியில்தான் கிராமங்கள்தோறும் பள்ளிகள், பள்ளிகள்தோறும் மதிய உணவு, ஆறுகள் தோறும் அணைகள், நகரங்கள்தோறும் தொழிற்சாலைகள் என்று தொழில், வேளாண்மை, கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமிடப்பட்டது.

காமராஜர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டத்தை மத்தி யில் ஆளும் காங்கிரஸ் அரசு, நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறது. இதற்காக ரூ.13,215 கோடி செலவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஆழியாறு, வைகை, மணிமுத்தாறு, பவானி சாகர் உள்ளிட்ட ஆறுகளில் அணை கள் கட்டினார். பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை, கிண்டி, அம்பத்தூரில் தொழிற்பேட்டை, நெய்வேலி என்.எல்.சி., திருச்சி பெல் கம்பெனி என்று அத்தனை தொழிற்சாலைகளும் அவரது ஆட்சியில் உருவாக்கப்பட்டவை.

இந்தியாவுக்கே முன்னோடி தலைவராக வாழ்ந்த காமராஜரைப் பற்றி உலகம் அறிய, இந்த சிலையை துறைமுகத்தில் நிறுத்தி இருக்கிறோம். வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு இந்த சிலை இந்திய அளவிலும், உலக அளவிலும் நேர்மை, எளிமை, தூய்மை ஆகியவற்றை கடைபிடிக்க வழி வகுக்கும்.

இவ்வாறு வாசன் பேசினார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறும்போது, ‘‘தேசிய அளவில் முக்கிய கட்சிகள் எதுவும் இன்னும் கூட்டணியை உறுதி செய்யவில்லை. காங்கிரஸ் முதல்நிலை கட்சி. கடந்த இரண்டு முறை ஆட்சி அமைத்துள்ளோம். வரும் தேர்தலிலும் வெற்றி பெறும் வகையில், தமிழகத்தில் மக்கள் நம்பிக்கையைப் பெற்ற அணியாக காங்கிரஸ் கூட்டணி அமையும்’’ என்றார்.

நிகழ்ச்சியில் கப்பல் துறை இணைச் செயலாளர் முருகானந் தம், எண்ணூர் துறைமுகத் தலை வர் பாஸ்கராச்சார், சென்னை துறைமுகத் தலைவர் அதுல்ய மிஸ்ரா மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x