

தமிழ்நாட்டின் நாகை மாவட்டத்துக்குள் இருக்கும் புதுவை மாநிலத்தைச் சேர்ந்த காரைக்கால் பகுதிக்குள் மீண்டும் தமிழக வாகனங்கள் நுழையாதவண்ணம் இன்று மாலை தடை விதிக்கப் பட்டுள்ளது.
நாகூர் அருகேயுள்ள வாஞ்சூர் சோதனைச்சாவடியில் இன்று மாலை தமிழக வாகனங்களை மறித்த காரைக்கால் மாவட்ட போலீஸார் தமிழக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என்று கூறி திருப்பி அனுப்பினர்.
காரைக்கால் பகுதிகளுக்குச் செல்ல காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி அளித்தனர். ஆதார் கார்டில் காரைக்கால் பகுதி முகவரி இருப்பவர்கள் மட்டுமே ஆவணத்தைக் காட்டிய பிறகு அனுமதிக்கப்பட்டார்கள்.
நாகூர் மற்றும் நாகப்பட்டினத்தைத் சேர்ந்த ஊர்களில் உள்ளவர்கள் யாரும் தற்சமயம் காரைக்கால் வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பதை ஒலிப்பெருக்கி மூலம் அறிவித்து நாகப்பட்டினம் பகுதி மக்களை திருப்பி அனுப்பினர். இதேபோல காரைக்கால் மாவட்டத்தின் மற்ற மூன்று எல்லைகளிலும் உள்ள நண்டலாரு, நல்லாத்தூர், அம்பகரத்தூர் ஆகிய சோதனைச்சாவடிகளிலும் தமிழக வாகனங்கள் திருப்பி அனுப்பப் பட்டன.
தமிழக பகுதிகளில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் புதுச்சேரி மாநிலத்திற்குள் வரும் அருகாமை மாவட்டங்களான கடலூர், விழுப்புரம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் மூலம் புதுவை மாநிலத்திலும் தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. அதனால் புதுவை மாநில எல்லை முழுவதுமாக மூடப்பட்டது. மருத்துவம் சார்ந்த தேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி முதல் காரைக்கால் - நாகப்பட்டினம் மாவட்ட எல்லையைத் திறந்து எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் வாகனங்களை அனுமதித்தனர். அதனால் தமிழகப் பகுதியைச் சேர்ந்த அதிகமான வாகனங்கள் காரைக்காலுக்குள் ஊருடுவின.
வெறும் நான்கு பேர் மட்டுமே கரோனா தொற்று ஏற்பட்டு அவர்களும் குணமடைந்து விட்ட நிலையில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களால் மீண்டும் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதைக் கண்டு அச்சமடைந்த காரைக்கால் மாவட்ட நிர்வாகம் இன்று மாலை திடீரென எல்லையை இழுத்து மூடியுள்ளது. இது இரண்டு மாவட்ட மக்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.