ஆசிட் வீசியதால் பார்வை இழந்த மாணவிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு 

ஆசிட் வீசியதால் பார்வை இழந்த மாணவிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு 
Updated on
1 min read

ஆசிட் வீச்சில் பார்வை இழந்த கல்லூரி மாணவிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டதாக உயர் நீதிமன்ற கிளையில் தெரிவிக்கப்பட்டது.

மதுரை மாவட்டம், பேரையூர் பகுதியைச் சேர்ந்த மாணவி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

திருமங்கலத்திலுள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் கடந்த 2014-ல் பிஏ ஆங்கிலம் படித்தேன். கடந்த 12.9.2014-ல் திருமங்கலம் டவுன் பகுதியில் நடந்து சென்றிருந்த போது ஒருவர் என் முகத்தில் ஆசிட் வீசினார். இதில் என் வலது கண் பார்வை பறிபோனது.

இது தொடர்பாக திருமங்கலம் டவுன் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதுவரை எனக்கு இழப்பீடு வழங்கவில்லை. எனக்கு ஏற்பட்ட உடல் மற்றும் மனரீதியான பாதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர்/ சார்பு நீதிபதி வி.தீபா ஆஜராகி, மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் பரிந்துரையின் பேரில் மனுதாரரின் வங்கி கணக்கில் ரூ.5 லட்சம் இழப்பீடு செலுத்தப்பட்டுள்ளது என்றார்.
இதையேற்று மனுவை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in