Published : 11 Jun 2020 06:42 PM
Last Updated : 11 Jun 2020 06:42 PM

மக்கள் பயத்தைப் போக்க ஊரடங்கை அறிவித்தால் 15 நாட்கள் கடையடைப்புக்குத் தயார்: விக்கிரமராஜா நிதித்துறைச் செயலரிடம் மனு 

கரோனா தொற்று காரணமாக பெருகிவரும் நோயாளிகள் எண்ணிக்கை, உயிரிழப்பு காரணமாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள பயத்தைப் போக்க அரசு முழு ஊரடங்கை அறிவித்தால் தாங்கள் 15 நாட்கள் கடையடைப்பு நடத்தத் தயாராக உள்ளோம் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

சென்னையில் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த 15 நாட்கள் கடைகளை அடைக்க அரசு உத்தரவிட்டால் கடைகள் அடைக்கப்படும் என்று விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணனை நேரில் சந்தித்த அவர் இதுகுறித்து மனு அளித்தார். அதில் மேலும் சில கோரிக்கைகளை இணைத்திருப்பதாகத் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் விக்கிரமராஜா தெரிவித்ததாவது:

“இன்று வைரஸ் தொற்று அதிகப்படியாக போய்க்கொண்டு இருக்கிறது. பொதுமக்களும் வணிகர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பொதுமக்கள் பயத்தைப் போக்கும் வகையில் அரசு ஊரடங்கை அறிவித்தால், நாங்களும் தியாக மனப்பான்மையுடன் 15 நாட்கள் ஒத்துழைப்பு கொடுத்து கடைகளை அடைக்கத் தயாராக இருக்கிறோம்.

கடையடைப்பு என்று அரசு முடிவெடுத்தால் 4 நாட்கள் பொதுமக்களுக்கு அவகாசம் வழங்கிட வேண்டும். இந்த நான்கு நாட்களுக்கு பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்க அவகாசம் கிடைக்கும். தற்போது 40 சதவீத மக்கள் தங்களுக்குத் தேவையான இருப்பை வாங்கி வைத்துள்ளனர். 40 சதவீத மக்கள்தான் அன்றாடம் வாங்கி உபயோகிக்கும் நிலைக்கு உள்ளனர்.

அவர்களுக்கும் அரசு ரேஷன் கடைகள் மூலம் மளிகைப் பொருட்கள் கிடைக்க வழி செய்தால் சமாளிக்கலாம். கடைகளைத் திறந்து வைப்பதால் வணிகர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். கடை திறந்து வைத்தால் கடை உள்ளே ஒருவர் வருகிறார். அவர் மூலம் எங்களுக்குத் தொற்று வந்தால் எங்கள் வணிகர் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து விடுவிக்கத்தான் இந்த நிலைக்கு நாங்கள் வந்துள்ளோம்”.

இவ்வாறு விக்கிரமராஜா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x