

தமிழகத்தில் கூட்டுறவு நூற்பாலைகளில் காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கு மின்னணு பொறியியல் பட்டயப் படிப்பு முடித்தவர்களை விண்ணப்பிக்க அனுமதிக்கக்கோரி தாக்கலான மனுவுக்கு கைத்தறித்துறை இயக்குனர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த முனியசாமி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
நான் மின்னணு பொறியியல் பிரிவில் சி உரிமத்துடன் பட்டயப் படிப்பு முடித்துள்ளேன். மின்னணு பொறியாளர் பணிக்கு மின்னணு பொறியியல் பட்டம் அல்லது சி உரிமத்துடன் பட்டயப் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேனி, தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை மாவட்டங்களில் கூட்டுறவு நூற்பாலைகளில் காலியாக உள்ள மின்னணு பொறியாளர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக மார்ச் 12, 13 அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அந்த அறிவிப்பில் மின்னணு பொறியியல் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டது. அது குறித்து கேட்டதற்கு, பட்டம் பெற்றவர்கள் மட்டுமே நவீன முறைகளை கையாளும் திறன் பெற்றவர்கள் என்றனர். மின்னணு பொறியாளர் பணிக்கு பட்டயப்படிப்பு முடித்தவர்களை தேர்வு செய்யாதது சட்டவிரோதம்.
எனவே, தேனி, தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு நூற்பாலைகளில் மின்னணு பொறியாளர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பை ரத்து செய்து, மின்னணு பொறியியல் துறையில் சி உரிமத்துடன் பட்டயப் படிப்பு படித்தவர்களையும் விண்ணப்பிக்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரித்து, மனு தொடர்பாக கைத்தறித்துறை இயக்குனர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 22-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.