Last Updated : 11 Jun, 2020 04:44 PM

 

Published : 11 Jun 2020 04:44 PM
Last Updated : 11 Jun 2020 04:44 PM

சேலத்தில் ஈரடுக்கு மேம்பாலத்தைத் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி: எம்ஜிஆர், ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்டது

மேம்பாலத்தைத் திறந்து வைக்கும் முதல்வர் பழனிசாமி | படம்: எஸ்.குரு பிரசாத்.

சேலம்

சேலம் குரங்குச்சாவடி முதல் அண்ணா பூங்கா வரையிலான ஈரடுக்கு மேம்பாலம், லீ-பஜார் மேம்பாலங்களை முதல்வர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

புதிய ஈரடுக்கு மேம்பாலம் திறந்து வைப்பு:

சேலம் மாநகரப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையில் குரங்குச்சாவடி முதல் அண்ணா பூங்கா வரையிலான ஈரடக்கு மேம்பாலம், ஏவிஆர் ரவுண்டானா முதல் ராமகிருஷ்ணா சாலை வரையிலான மேம்பாலம், லீ-பஜார் மேம்பாலம், அணைமேடு மற்றம் முள்ளுவாடி கேட் பகுதிகளில் உயர்மட்ட மேம்பாலம் என ரூ.441 கோடி மதிப்பீட்டில் கட்ட அரசு நடவடிக்கை எடுத்தது.

முன்னதாக ஏவிஆர் ரவுண்டானா மேம்பாலம் திறக்கப்பட்ட நிலையில், இன்று (ஜூன் 11) குரங்குச்சாவடி முதல் அண்ணா பூங்கா வரையிலான 5.1 கி.மீ., தொலைவில் கட்டப்பட்ட ஈரடுக்கு மேம்பாலத்தையும், லீ-பஜார் மேம்பாலத்தையும் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்து, பேருந்து மற்றும் வாகனப் போக்குவரத்தைத் தொடங்கி வைத்தார்.

புதிதாகக் கட்டப்பட்ட ஈரடுக்கு மேம்பாலம் | படம்: எஸ்.குரு பிரசாத்

நிகழ்ச்சிக்கு ஆட்சியர் ராமன் தலைமை வகித்தார். எம்.பி., எம்எல்ஏக்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரில் மேம்பாலங்கள்

புதிய மேம்பாலத்தைத் தொடங்கி வைத்து முதல்வர் பழனிசாமி கூறியதாவது:

"சேலம் மாநகரில் ஏற்பட்டுள்ள கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மேம்பாலங்கள் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள், நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த என்னிடத்தில் கோரிக்கை வைத்தனர். கடந்த 2012-ம் ஆண்டு இக்கோரிக்கையை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் கூறியதும், நிதி ஒதுக்கி, திட்டம் நிறைவேற்றிட அனுமதி வழங்கினார்.

ஏவிஆர் ரவுண்டானா மேம்பாலம் முன்பே தொடங்கி வைத்துவிட்ட நிலையில், தற்போது, குரங்குச்சாவடி முதல் அண்ணா பூங்கா வரையிலான ஈரடுக்கு மேம்பாலம், லீ-பஜார் மேம்பாலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த ஈரடுக்கு மேம்பாலத்துக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரும், ஏவிஆர் ரவுண்டானா மேம்பாலத்துக்கு மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பெயரும் சூட்டப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து விட்டாலும், அவரது திட்டங்கள் நம் கண்கள் முன்னால் இன்று காட்சி அளிக்கிறது. அணைமேடு, முள்ளுவாடி கேட் பகுதியிலான உயர்மட்ட மேம்பாலங்கள் விரைவில் கட்டுமானப் பணி முடித்து, திறக்கப்படவுள்ளன.

சேலம் மாநகரில் புதிய மேம்பாலங்களால் பல ஆண்டுகளாக போக்குவரத்து நெரிசலில் சிக்கியிருந்த பொதுமக்கள் நெரிசல் இல்லாத பயணத்தை மேற்கொள்ள வழிவகை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது".

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x