

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சைக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்துள்ளதாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நுண்ணுயிர் பிரிவில் இதுவரை 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இரவு பகலாக மருத்துவ பணியாளர்கள் தினமும் 500 முதல் 800 வரை மாதிரிகளை பரிசோதிக்கிறார்கள். இதுவரை 509 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு, அவர்களில் 461 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர்.
கரோனா தொற்று இருக்கும் சிறுநீரக நோயாளிகளுக்கு டயாலிஸிஸ் சிகிச்சை செய்யப்பட்டது. தொற்று இருப்பவர்கள் உட்பட இதுவரை இல்லாத அளவுக்கு மே மாதத்தில் மட்டும் 850 பிரசவ சிகிச்சைகள் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டன. அதில் 300-க்கும் மேற்பட்டவை அறுவை சிகிச்சைகள்.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனாவுக்காக மட்டும் 1100 படுக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் 600 படுக்கைகளுக்கு ஆக்ஸிஜன் வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் 100 அவசர சிகிச்சை வசதியுள்ள படுக்கைகளும், 70 வெண்டிலேட்டர் கருவிகளும் தயார் நிலையில் இருக்கின்றன. கரோனாவால் ஏற்படும் மூச்சுத்திணறலுக்காக வழங்கப்படும் டொசிலிசுமாப் போன்ற அதிநவீன மருந்துகளும் கைவசம் உள்ளன.
திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்துள்ளது என்று தெரிவித்தார்.