

அகில இந்திய மருத்துவ இட ஒதுக்கீட்டில் ஓபிசி மாணவர்கள் புறக்கணிக்கப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் தாக்கல் செய்த மனுவில் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், பொது விஷயத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்ந்து வந்ததற்குப் பாராட்டு தெரிவித்தது.
தமிழகத்தில் இளநிலை மருத்துவப் படிப்பு, முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய இட ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த தமிழக அரசு, திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, வைகோ சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தன.
நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்பு, முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய இட ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த உத்தரவிடக் கோரி அன்புமணி ராமதாஸ் தாக்கல் செய்த ரிட் மனு உள்ளிட்ட பல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தன.
இந்த வழக்கில் மனுதாரர்கள் தரப்பில், “ நாங்கள் புதிதாக இட ஒதுக்கீடு கேட்கவில்லை. ஏற்கெனவே உள்ளதை அமல்படுத்தவே கோருகிறோம். மேலும் இட ஒதுக்கீடு அமல்படுத்தாமல் உள்ளது அடிப்படை உரிமை மீறல் ஆகும்” என வாதம் வைக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “இட ஒதுக்கீடு அடிப்படை உரிமையின் கீழ் வராது. எனவே இந்த மனுவை நாங்கள் விசாரணைக்கு எடுக்க மாட்டோம். மேலும் தற்போது அனைத்து மனுதாரர்களும் தமிழகத்துக்கு 50% இடங்களை ஒதுக்கக் கோருகின்றீர்கள். எனவே இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தைத்தான் அணுக வேண்டும்.
எனவே, மருத்துவப் படிப்புக்காக அகில இந்தியத் தொகுப்புக்கு தமிழகம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அளிக்கும் இடங்களில் 50% தமிழக ஓபிசி பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகுங்கள்” எனத் தெரிவித்தனர்.
மேலும், மனுவைத் திரும்பப் பெறுங்கள் என திமுக தரப்பு வழக்கறிஞரிடம் தெரிவித்தனர்.
அதற்குப் பதிலளித்த திமுக தரப்பு, “பாதிக்கப்பட்ட அனைவரும் நீதிமன்றம் வர இயலாது. எனவே தான் அரசியல் கட்சிகள் நாங்கள் முன்னெடுக்கிறோம்” எனத் தெரிவித்தது.
''கூடுதலாக தொடர்ச்சியாக வாதம் செய்தால் வழக்கை விசாரிக்க மாட்டோம். மனுக்களை வாபஸ் பெறுங்கள். அதற்கான சுதந்திரத்தைத் தருகிறோம். மேலும் இந்த வழக்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மனுதாரர்களுக்கு முழுமையான அனுமதி வழங்குகிறோம்'' என்று நீதிபதிகள் தெரிவித்தனர்
இதனையடுத்து மனுக்களை வாபஸ் பெறுவதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழகத்தில் இளநிலை மருத்துவப் படிப்பு, முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய இட ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி உயர் நீதிமன்றத்தை நாட தமிழக அரசியல் கட்சிகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டது.
மேலும், ஒரு பொதுப் பிரச்சினைக்காக அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.