Published : 11 Jun 2020 12:51 PM
Last Updated : 11 Jun 2020 12:51 PM

தமிழகத்தில் கரோனா மரணங்கள் குறைத்துக் காட்டப்படுகிறதா? படுக்கை வசதிகள் உள்ளனவா?- முதல்வர் பழனிசாமி பதில்

முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்

சென்னை

தமிழகத்தில் சமூகப் பரவல் இல்லை என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் புதிதாக கட்டப்பட்ட ஈரடுக்கு மேம்பாலத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூன் 11) தொடங்கி வைத்தார்.

அதன் பிறகு, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு முதல்வர் பழனிசாமி பதிலளித்தார்.

கரோனா மரணங்கள் குறைத்துக் காட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?

இறப்பில் என்ன வித்தியாசம்? அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் அளிக்கும் விவரங்களின் அடிப்படையில் வெளியிடப்படுகிறது. இறப்பை யாராலும் மறைக்க முடியாது. இறப்பு விவரங்களை எப்படிக் குறைத்துக் காட்ட முடியும்? எந்த இறப்பு வந்தாலும் பிரச்சினை இல்லை. ஆனால், கரோனா மரணங்கள் நிகழ்ந்தால் மக்களுக்குத் தெரிந்துவிடும். மரணங்களை மறைப்பதில் அரசுக்கு எந்தவித நன்மையும் இல்லை. இதில் வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படுகிறது. நாள்தோறும் புள்ளிவிவரங்களை வெளியிடுகிறோம். இதில் ஒளிவுமறைவு இல்லை.

கரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறதா?

இதுவரை 6 லட்சத்து 9,856 பேரைப் பரிசோதனை செய்துள்ளோம். இந்தியாவிலேயே அதிகமாக பரிசோதனை செய்த மாநிலம் தமிழ்நாடு. இதுவரை 36 ஆயிரத்து 841 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 ஆயிரத்து 675 மாதிரிகள் நேற்று பரிசோதிக்கப்பட்டுள்ளன. 77 பரிசோதனை மையங்கள் உள்ளன. 17 ஆயிரத்து 179 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,008 பேர் நேற்று மட்டும் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 19 ஆயிரத்து 333 பேர் இதுவரை வீடு திரும்பியுள்ளனர். 326 பேர் இதுவரை இறந்துள்ளனர்.

புற்றுநோய், நீரிழிவு, இருதய நோய்கள், சிறுநீரகப் பிரச்சினை உட்பட ஏற்கெனவே பல நோய்வாய்ப்பட்டு இறப்பவர்களின் விகிதம்தான் அதிகம். கரோனா தொற்று மட்டும் ஏற்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இறப்பு சதவீதம் குறைவாக இருக்கிறது.

யாரெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களைக் குணப்படுத்துவதுதான் அரசின் நோக்கம். அதற்கான அனைத்து வசதிகளையும் அரசு செய்திருக்கிறது. ஆயிரக்கணக்கிலான படுக்கை வசதிகள் உள்ளன. சேலம் மாவட்டத்தில் மட்டும் 2,000 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கூடுதலாக 5,000 படுக்கை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 3,384 வென்டிலேட்டர்கள் தமிழகத்தில் உள்ளன. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இது அதிகம். மருத்துவப் பணியாளர்களை அதிகமாக நியமித்துள்ளோம்.

தமிழகத்தில் சமூகப் பரவல் உள்ளதா?

சமூகப் பரவல் கிடையாது. சமூகப் பரவல் என்றால் உங்கள் எல்லோருக்கும் தொற்று வந்திருக்க வேண்டும். நீங்கள் என் முன்பு பேச முடியாது. நானும் உங்கள் முன்பு பேசிக்கொண்டிருக்க முடியாது. தொற்று ஏற்பட்டவர்களின் தொடர்பில் இருந்தவர்களைப் பரிசோதித்ததன் அடிப்படையிலேயே இவ்வளவு தொற்றாளர்களைக் கண்டுபிடித்துள்ளோம்.

சென்னை மக்கள்தொகை அதிகமான நகரம். குறுகிய தெருக்களை உடையது. ஆர்.கே.நகரில் 3 அடி சந்தில் 30 வீடுகள் உள்ளன. அங்கு ஒருவருக்கு ஏற்பட்டால் அனைவருக்கும் தொற்று ஏற்பட்டு விடுகிறது.

இந்தத் தொற்று ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதில் பரவக்கூடியது. இது புதிய வைரஸ் நோய். இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. மருத்துவப் பணியாளர்கள், சிறப்பான சிகிச்சை மூலமே குணப்படுத்தி வருகின்றனர்.

பல மாவட்டங்களில் தொற்று இல்லை. வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களைப் பரிசோதித்துதான் புதிதாகத் தொற்று வருகிறது.

தமிழகத்தில் கோயில்கள் திறக்கப்படுமா?

கோயில்கள் திறக்கப்பட்ட மாநிலங்களில் இப்போது மூடுவதற்கு முடிவெடுத்துள்ளனர்.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x