கரோனா: எதிர்மறைக் கருத்துகளைத் தவிர்த்து வதந்திகளை புறக்கணிப்போம்; ஜி.கே.வாசன் வேண்டுகோள்

ஜி.கே.வாசன்: கோப்புப்படம்
ஜி.கே.வாசன்: கோப்புப்படம்
Updated on
1 min read

கரோனா தொடர்பான விஷயங்களில் எதிர்மறைக் கருத்துகளைத் தவிர்த்து, வதந்திகளை புறக்கணிப்போம் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (ஜூன் 11) வெளியிட்ட அறிக்கை:

"கரோனா தொற்றுக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் ஓருங்கிணைந்து போராடி வருகிறது. ஆனாலும் சென்னை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களிலும் வேறு சில மாவட்டங்களிலும் கரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. அது இன்னும் அதிகரிக்குமோ என்ற அச்சமும் பயமும் எழுகின்றது. இந்த தொற்று இன்னும் அதிகரிக்கலாம் என்று மருத்துவ நிபுணர்களும் கவலையோடு கருத்தை தெரிவித்துள்ளனர்.

இச்சூழலில் மக்கள் கடந்த 75 நாட்களாக ஊரடங்கால் அனுபவித்த சிரமங்களை உணர்ந்து அரசு ஊரடங்கில் பல தளர்வுகளை அறிவித்துள்ளது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் மக்கள் சுய கட்டுப்பாட்டைக் கடைபிடிக்க வேண்டும். தன்னிச்சையாகச் செயல்படுவதைத் தவிர்க்க வேண்டும். ஆதாரமற்ற தகவல்களை வதந்திகளை பரப்புவது அறவே கூடாது. விவரம் தெரியாதவர்கள் செய்யும் இச்செயல்கள் நமக்கே வினையாக வளரும் வாய்ப்பு உள்ளது. நோய் தடுப்புக்கு எதிரான போரில் நாம் வெற்றி காண வேண்டும்.

இன்று சுமார் 3.5 லட்சம் பேர் நோய் கண்காணிப்பில் உள்ளார்கள் என்பது தகவல். அவர்கள் அனைவரும் குணம் பெற வேண்டும். அடுத்து எவருக்கும் பாதிப்பு வரக் கூடாது. கட்டுபாடுகள் மேலும் கடுமையாக்கக் கூடிய சூழல் எழுந்தாலும் எழலாம். அவற்றையும் நாம் கடைபிடிக்கத் தயாராக இருக்க வேண்டும்.

ஆகவே, எல்லோரும் இணைந்து செயல்படுவோம். எதிர்மறைக் கருத்துக்களைத் தவிர்ப்போம். வதந்திகளைப் புறக்கணிப்போம். கட்டுப்பாடுகளைக் கடைபிடிப்போம். கரோனாவை ஒழிப்போம். 'இல்லை கரோனா தமிழகத்தில்' என்ற லட்சிய நிலையை எட்டுவோம். ஏற்கெனவே நாம் கடைப்பிடித்து வரும் நெறிமுறைகளை இன்றும் உறுதியோடு கடைபிடித்து வெற்றி காண்போம்"

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in