

அரசின் வழிகாட்டுதலின்படியே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என, மருத்துவர்கள் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.
விழுப்புரம் அருகே கண்டமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பணியிலிருந்த மருத்துவர் பிரகாஷ், பல்நோக்கு மருத்துவ பணியாளர் பூஞ்சோலை ஆகியோர் நோயாளி ஒருவரை 10 அடி தூரத்தில் நிற்க வைத்து டார்ச் லைட் அடித்து சிகிச்சை அளிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை தொடர்ந்து மாவட்ட சுகாதாரத்துறை மருத்துவர் பிரகாஷுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியும், பல்நோக்கு மருத்துவ பணியாளர் பூஞ்சோலையை பணி இடமாற்றம் செய்தும் உத்தரவிடப்பட்டது.
இது குறித்து தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வெங்கட கிருஷ்ணனிடம் கேட்டபோது, "கடந்த மார்ச் 26-ம் தேதி மருத்துவத்துறை வெளியிட்ட உத்தரவின் பேரில் புறநோயாளிகளை குறைந்தபட்சம் 2 மீட்டர் இடைவெளியில் அமர வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற வழிகாட்டுதலின்படியே மருத்துவர் பிரகாஷும் சிகிச்சை அளித்துள்ளார்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் புறநோயாளிகள் பிரிவில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு கரோனா தொற்று நோய் தடுப்பு கவச உடைகள் தேவையில்லை என அரசு தெரிவித்துள்ளது. இருசக்கர வாகனத்தில் சென்று நிறுத்தும்போது தன்னிச்சையாக நம் இடது கால் 'சைட் ஸ்டாண்டை' தள்ளுவது போல தொண்டை வலி என்றவுடன் டார்ச் லைட் அடித்து சிகிச்சை மேற்கொண்டார்.
சக்தி வாய்ந்த அந்த 'டார்ச் லைட்' வெளிச்சம் மூலம் சிகிச்சை அளிக்க முடியும். இதனை ஊடகங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை. இதே நடைமுறை தமிழகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. இதில் மருத்துவர் எவ்வித தவறும் செய்யவில்லை" என்றார்.
மேலும் இது குறித்து அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ப.சாமிநாதன் வெளியிட்ட அறிக்கையில், "நோயாளிக்கு மருத்துவம் செய்வது, நோயாளிகளைத் தொடுவதே மருத்துவர்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று இருக்கும் சூழலில் தான் மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவரும் துணிவுடன் பணியாற்றி வருகிறார்கள்.
தனியார் மருத்துவக் கட்டமைப்பு பெரும்பாலும் தன் பணிகளை நிறுத்திக் கொண்ட நிலையில், அரசு மருத்துவக் கட்டமைப்பு அஞ்சாமல் தனது பணிகளைத் தொடங்கியது.
கடந்த 26.03.2020 ஆம் தேதி மாநில பெருந் தொற்றுக் கட்டுப்பாட்டு அறையின் தலைமை செயல் அலுவலர் நாகராஜ் அனுப்பிய சுற்றறிக்கையில், வெளி நோயாளர் பிரிவில் குறைந்த அளவு 2 மீட்டர் இடைவெளிவிட்டு நோயாளிகளை கவனிக்க வேண்டும் என்றும், இவ்விதி அவசர ஆபத்து நிலை நோயாளிகளுக்கு பொருந்தாது என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த சுற்றறிக்கையின் அடிப்படையில் தான் தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் 2 மீட்டர் இடைவெளியுடன் நோயாளிகளை கவனித்து வருகின்றனர். கண்டமங்கலம் அரசு மருத்துவரும் இதைப் பின்பற்றியே நோயாளியைப் பார்த்துள்ளார். அரசு ஆணைப்படி செயல்பட்ட மருத்துவருக்கு குறிப்பாணை வழங்கப்பட்டதை உடனே விலக்கிக் கொள்ள வேண்டுகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.