Published : 11 Jun 2020 07:04 AM
Last Updated : 11 Jun 2020 07:04 AM

கரோனா பரிசோதனைக்கு வருவோரிடம் சுய அறிவிப்பு படிவம் கட்டாயம் பெற வேண்டும்: ஆய்வகங்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்

ஒரு நபருக்கு கரோனா பரிசோதனை செய்வதற்கு முன், அவரது குடும்பத்தினர் மற்றும் தொடர்பில் இருந்தவர்கள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய சுய அறிவிப்பு படிவம் பெற வேண்டும் என்று பரிசோதனை ஆய்வகங்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக சென்னையில் உள்ள 28 அரசு மற்றும் தனியார் கரோனா பரிசோதனை ஆய்வகங்களுக்கு மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னை மாநகராட்சியில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளொன்றுக்கு 1,200 வரை உயர்ந்து வருகிறது. இதனால் கரோனா தொற்று ஏற்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடிப்பது பெரும் சவாலாக உள்ளது. மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள், கரோனா தொற்று ஏற்பட்டவர்களை திரட்டி, கரோனா சிகிச்சை மையம், லேசான பாதிப்பு உள்ளோரை, அதற்கான கவனிப்பு மையம்போன்றவற்றுக்கு கொண்டு செல்லும் வேளையில், அன்றே இந்த நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடிப்பது சிரமமாக உள்ளது.

எனவே, கரோனா பரிசோதனைக்காக ஆய்வகம் வரும்போது, அவரிடம் அவரது குடும்பத்தினர், தொடர்பில் இருந்தவர்களின் விவரங்கள் அடங்கிய சுய அறிவிப்பு படிவத்தை பெற வேண்டும். பரிசோதனை செய்த நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால், உடனடியாக, அவருடன் தொடர்பில் இருந்தோர் விவரங்களை மாநகராட்சிக்கு ஆய்வகங்கள் அனுப்பி வைக்க வேண்டும். அதைக் கொண்டு கள அலுவலர்கள் மூலமாக, அவர்களை தனிமைப்படுத்துவதற்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் ஏதுவாக இருக்கும்.

எனவே, சுய அறிவிப்பு படிவத்தை கட்டாயம் பெற வேண்டும். அவ்வாறு பெறத் தவறும் ஆய்வகங்கள் கரோனா பரிசோதனை செய்ய முடியாது. இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x