Last Updated : 10 Jun, 2020 08:45 PM

 

Published : 10 Jun 2020 08:45 PM
Last Updated : 10 Jun 2020 08:45 PM

கரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றாத தூத்துக்குடி தனியார் கணினி மையத்துக்கு பூட்டு: மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

தூத்துக்குடியில் கரோனா தடுப்பு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என, வணிக நிறுவனங்களில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை நடத்தினர். படம்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி

தூத்துக்குடியில் கரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றாத தனியார் கணினி மையத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் இன்று பூட்டு போட்டனர். மேலும், விதிமுறைகளை கடைபிடிக்காத 5 வணிக நிறுவனங்களுக்கு ரூ.20,400 அபராதம் விதித்தனர்.

தமிழகத்தில் கரோனா ஊரடங்கு அமலில் இருந்த போதிலும், பல்வேறு நிபந்தனைகளுடன் வணிக நிறுவனங்கள் செயல்பட அரசு அனுமதித்துள்ளது. ஏசி பயன்படுத்தக் கூடாது, ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கைகளை சுத்தம் செய்ய சானிடைசர் வசதி செய்ய வேண்டும் என்பன போன்ற நெறிமுறைகளை அரசு அறிவித்துள்ளது.

தூத்துக்குடியில் உள்ள வணிக நிறுவனங்கள் இந்த நெறிமுறைகளை பின்பற்றுகின்றனவா என, மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன் உத்தரவின் பேரில், நகர்நல அலுவலர் டாக்டர் எஸ்.அருண்குமார் தலைமையில் அதிகாரிகள் இன்று காலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். பாளையங்கோட்டை சாலையில் உள்ள பல்வேறு வணிக நிறுவனங்களில் அவர்கள் சோதனை நடத்தினர்.

அப்போது தனியார் கணினி மையம் ஒன்றில் ஏ.சி. இயங்கியதுடன், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், முகக்கவசம் அணியாமல் பலர் கூட்டமாக இருந்தனர். மேலும், உரிமத்தை முறையாக புதுப்பிக்கவில்லை.

இதையடுத்து அந்த கணினி மையத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் பூட்டு போட்டனர். இதேபோல் நெறிமுறைகளை முறையாக பின்பற்றதாக 5 வணிக நிறுவனங்களுக்கு ரூ.20,400 அபராதத்தை மாநகராட்சி அதிகாரிகள் விதித்தனர்.

இந்த சோதனையின் போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்பாகவும் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது 8 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் இருந்தது கண்டறியப்பட்டு ரூ4,700 அபராதம் விதிக்கப்பட்டதுடன், சுமார் 10 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x