Last Updated : 12 Sep, 2015 10:37 AM

 

Published : 12 Sep 2015 10:37 AM
Last Updated : 12 Sep 2015 10:37 AM

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் வெங்காய உற்பத்தியில் லாபம் ஈட்டும் கைதிகள்: விலை உயர்ந்துள்ளதால் அறுவடை பணிகள் தீவிரம்

திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் சிறை வளாகத்தில் சின்ன வெங்காயம் உற்பத்தி செய்து அதிக லாபம் ஈட்டி வருகின்றனர்.

திருச்சி மத்திய சிறையில் தண் டனைக் கைதிகள், விசாரணைக் கைதிகள் என 1,300-க்கும் மேற் பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களைக் கொண்டு சிறை வளாகத்திலுள்ள சுமார் 66 ஏக்கர் நிலத்தில் மா, வாழை, வெண்டைக் காய், கொத்தவரை, கத்தரிக்காய், தக்காளி, பச்சை மிளகாய், புடலங் காய், பீர்க்கங்காய், சுரைக்காய், பாகற்காய், முள்ளங்கி மற்றும் கீரை வகைகள் சாகுபடி செய் யப்படுகின்றன.

இதில் சுமார் 5 ஏக்கர் பரப்பள வில் சின்ன வெங்காயம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தற்போது வெளிச்சந்தையில் பெரிய வெங் காயத்துக்கு உள்ள தட்டுப்பாட்டால் சின்ன வெங்காயத்துக்கு நல்ல விலை கிடைக்கிறது. இதைய டுத்து, சிறை வளாகத்தில் பயிரிடப் பட்டுள்ள சின்ன வெங்காயத்தை அறுவடை செய்யும் பணியில் கைதி கள் ஈடுபட்டுள்ளனர். சின்ன வெங்காயத்தைப் பறித்து, தூய் மைப்படுத்தி, தரம் பிரித்து அவற்றை சிறையின் வெளிப் பகுதியிலுள்ள ‘பிரிசன் பஜார்’-ல் விற்பனை செய்து வருகின்றனர்.

இதுபற்றி மத்திய சிறைக் கண்காணிப்பாளர் முருகேசனிடம் கேட்டபோது, “இதற்கு முன், சிறை வளாகத்திலுள்ள அனைத்து நிலங்களிலும் ஒரே நேரத்தில் சாகுபடியைத் தொடங்கினோம். அவை அறுவடைக்கு வரும் காலத்தில் எதிர்பாராமல் விலை வீழ்ச்சி அடைந்துவிட்டால் ஒட்டுமொத்தமாக நஷ்டத்தைச் சந்திக்க வேண்டியிருந்தது. எனவே, வேளாண் துறை அதிகாரிகளின் அறிவுரைப்படி தற்போது ஒரே பயிரை, 5 கட்டமாகப் பிரித்துச் சாகுபடி செய்துவருகிறோம்.

உதாரணமாக இன்று ஒரு ஏக்கர் நிலத்தில் வெங்காயம் பயிரிட்டால், அடுத்த 20 நாட் களுக்குப் பிறகு அடுத்த ஒரு ஏக்கர் நிலத்தில் வெங்காயம் பயிரிடுகிறோம். இவ்வாறு 5 கட் டங்களாகப் பிரித்து சாகுபடி செய்வதால் எல்லா நாட்களிலும் வெங்காயம் கிடைக்கிறது. மேலும், இழப்பு ஏற்படாமல் நல்ல லாபம் ஈட்ட முடிகிறது.

தற்போது 20 சென்ட் நிலத்திலிருந்து சுமார் 500 கிலோ வரை சின்ன வெங்காயம் அறுவடை செய்யப்பட்டுள்ளது. இந்த முதல் தர வெங்காயத்தை வெளிச்சந்தையின் விலையைவிட மிக குறைவான விலையில் ‘பிரிசன் பஜாரில்’ விற்பனை செய்துவருகிறோம். பொதுமக்கள் வாங்கி பயன்பெறலாம். இதில் கிடைக்கும் வருவாயின் ஒரு பகுதி கைதிகளுக்குப் பிரித்து அளிக்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x