Published : 10 Jun 2020 07:43 PM
Last Updated : 10 Jun 2020 07:43 PM

'முதியவர்கள் இருக்காங்க உள்ளே வராதீங்க': கரோனாவை தடுக்க மதுரை மாநகராட்சி புதிய வியூகம்

மதுரையில் முதியவர்கள் இருக்கும் 1.5 லட்சம் வீடுகளில் ‘முதியவர்கள் இருக்காங்க, உள்ளே வராதீங்க’ என்ற ஸ்டிக்கரை ஓட்டி ‘கரோனா’வை தடுக்க மாநகராட்சி புதிய வியூகம் அமைத்துள்ளது.

சென்னை மற்றும் வடமாநிலங்களில் இருந்து இ-பாஸ் பெற்றும், பெறாமலும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் அதிகமானோர் நுழைந்துள்ளனர். இ-பாஸ் பெற்றவர்களை சுகாதாரத்துறை கண்காணித்து அவர்களைத் தனிமைப்படுத்தி அறிகுறியிருப்பவர்களை பரிசோதனை செய்கிறது.

இ-பாஸ் இல்லாமல் நுழைந்தவர்களை சுகாதாரத்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை. தற்போது ‘கரோனா’வால் பாதிக்கப்பட்டவர்கள் இறப்பு விகிதம் சத்தமில்லாமல் உயரத்தொடங்கியுள்ளது.

அதில், பாதிப்பிலும், உயிரிழப்பிலும் முதியவர்கள் அதிகமானோர் இருப்பதாக சுகாதாரத்துறை கவலை தெரிவித்துள்ளது.

அதனால், மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளில் வசிக்கும் முதியவர்களை பாதுகாப்பது மூலம் அவர்கள் குடும்பத்தினரையும், சுற்றியுள்ளவர்களையும் காக்கும் நடவடிக்கையில் மாநகராட்சி களம் இறங்கியுள்ளது.

மாநகராட்சி ஆணையாளர் விசாகன் கூறுகையில், ‘‘மாநகராட்சி 100 வார்டுகளில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 1.5 லட்சம் பேர் வசிக்கின்றனர். அவர்கள் பற்றிய கணக்கு எடுத்து விட்டோம். ‘கரோனா’ நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள முதியவர்களையும், குழந்தைகளையும் அதிகம் தாக்குகிறது.

அதனால், முதியவர்கள் வசிக்கும் வீடுகளில் ‘முதியவர்கள் இருக்காங்க; உள்ளே வராதீங்க, ’’ போன்ற வாசகம் குறிப்பிடப்பட்ட விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஓட்ட உள்ளோம்.

முதியவர்கள் வசிக்கும் வீடுகளில் முடிந்தவர்கள் வெளியாட்கள் செல்வதை தவிர்க்க வேண்டும். தவிர்க்வே முடியாமல் செல்பவர்கள் கவனமுடன் இருக்கவே இந்த ஸ்டிக்கரை ஓட்ட உள்ளோம்.

ஏற்கெனவே நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட வைட்டமின் மாத்திரைகள், ஜிங்க் மாத்திரைகள், கபசுர குடிநீர் பொடிகள், ஹோமியோபதி மாத்திரைகள் வழங்குகிறோம். தற்போது கூடுதலாக முதியவர்களுக்கு (Ivermectin tablet) ஐவர்மெட்ன் மாத்திரை வழங்கப்பட உள்ளது.

இந்த மாத்திரை ஒட்டுண்ணி வகையைச் சார்ந்தவை. வைரஸ் அதிகமாக பெருகுவதை இந்த மாத்திரை கட்டுப்படுத்தும் என்று சில மருத்துவ ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், இந்த மாத்திரைகள் வழங்க பரிந்துரை செய்துள்ளோம், ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x